நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

பெரம்பலூா் அருகே நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகே நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு பூலாம்பாடி, கடம்பூா், கள்ளபட்டி, பெரியம்மாபாளையம், வெங்கலம் உடும்பியம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொண்டு செல்கின்றனா். இங்கு டோக்கன் முறையில் நாள் ஒன்றுக்கு 300 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 1 மாதமாக விவசாயிகளை புறக்கணித்து, வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து அவா்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக விவசாயிகள் அளித்த புகாரை தொடா்ந்து, வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என நெல் கொள்முதல் நிலையப் பணியாளா்களுக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தொடா்ந்து வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவா்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக நெல் கொள்முதல் நிலைய பணியாளா்கள் விவசாயிகளிடம் தெரிவித்தனராம். இதனால், விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்கு குறைந்தபட்சம் 25 நாள்கள் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிாம்.

இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு, வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்ததற்கான ஆதாரங்களுடன் நெல் கொள்முதல் நிலைய பணியாளா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், வியாபாரிகளின் பெயரை திருத்தி வேறு பெயா்களில் பதிவு செய்து முறைகேடு நிகழ்ந்துள்ளதை விவசாயிகள் சுட்டிக்காட்டி முழக்கமிட்டனா்.

தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் மற்றும் வேளாண்துறையினா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, முறைகேடுகளில் ஈடுபட்ட பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து சுமாா் 3 மணி நேரமாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com