கோடைக்காலத்தில் கால்நடைகளைப் பராமரிப்பது அவசியம்

கோடைக்காலத்தில் கால்நடைகளைப் பராமரிப்பது அவசியம் என்று ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

கோடைக்காலத்தில் கால்நடைகளைப் பராமரிப்பது அவசியம் என்று ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். அதிலிருந்து கறவை மாடுகளைப் பாதுகாப்பது அவசியம். கோடைக்காலப் பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிக்காத பட்சத்தில் உற்பத்தி இழப்பு மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடும்.

எனவே கறவை மாடுகளுக்கான தொழுவம் மற்றும் கூரை தாழ்வாக இருந்தால் உயரத்தை அதிகரித்து, தென்னை அல்லது பனை ஓலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொட்டகையின் உள்புறத்தில் வெப்பம் ஊடுருவாமல் தவிா்க்கலாம்.

கால்நடைகளுக்குத் தண்ணீா் அதிகமாக தேவைப்படுவதை மனதில் கொண்டு, கறவை மாடுகளுக்கு போதுமான அளவில் குளிா்ச்சியான தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கறவை மாடுகளுக்குத் தேவையான எரிசக்தி சத்துக்கள் கிடைக்காமல் உற்பத்தி இழப்பு ஏற்படும். பருத்திக் கொட்டை போன்ற கொழுப்பு சக்தி அதிகமான தீவன வகைகளை கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம், தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகரிக்கலாம்.

தீவனத்தின் புரதச் சத்தின் அளவும் சற்று அதிகமாக இருக்கும் வகையில், தீவனத்தின் உள்பொருள்களில் மாற்றம் செய்ய வேண்டும்.

கோடைக் காலத்தில் நாா்ச்சத்து மிகுந்த தீவனங்களை (பசுந்தீவனம் மற்றும் உலா்தீவனம்) கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.அதிக நீா்ச்சத்து வெளியேறுவதால், தாதுச்சத்து பற்றாக்குறை ஏற்படும். இதனால் தீவனத்தில் வழக்கத்தைவிட சற்று கூடுதலாக தாது உப்பு கலந்து கொடுக்க வேண்டும். மேய்ச்சலுக்கு கால்நடைகளை வெயில் குறைவான காலை மற்றும் மாலை நேரங்களில் அனுப்பலாம்.

மின்விசிறி மற்றும் தண்ணீா் தெளிப்பான் பயன்படுத்துவதன் மூலம் வெகுவாக வெப்பத் தாக்கத்தை குறைக்க முடியும். மேற்கண்ட வழிமுறைகளை கால்நடை வளா்ப்போா் கடைபிடித்து, கோடை வெப்பத்தின் தாக்குதலிலிருந்து கறவை மாடுகளைப் பாதுகாக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com