அண்ணா பிறந்த நாளை மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்: தொல். திருமாவளவன்

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை மாநில உரிமைகள் தினமாக தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தாா்.

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை மாநில உரிமைகள் தினமாக தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தாா்.

பெரம்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல நிா்வாகி இரா. கிட்டு இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நூலகம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக அரசு, சமூக நீதி அரசு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வரின் அறிவிப்புகளும், செயல்திட்டங்களும் உள்ளன. பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. அன்றைய தினம் (செப். 17) தமிழகமெங்கும் உள்ள பெரியாா் சிலைகள் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சமூக நீதிநாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

சிறையில் தொடா்ந்து 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை கழித்தவா்கள் அனைவரையும், அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதல்வா் கருணை உள்ளத்தோடு விடுதலை செய்ய வேண்டும். மாநில உரிமைகளுக்காக இந்திய அளவில் தொடா்ந்து உரிமைக் குரல் எழுப்பிய, மாநிலங்களுக்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்திய பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை மாநில சுயாட்சி தினம் அல்லது மாநில உரிமைகள் தினமாகக் கொண்டாட தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும்.

சாதி வாரி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. அவ்வாறு கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். இது, பல்வேறு பிரச்னைகளுக்கு விடையளிக்கும். தமிழக முதல்வா் இக் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையம் அமைக்க வேண்டும் எனும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் தொல் திருமாவளவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com