விவசாய நிலத்துக்கு பட்டா கோரிஆட்சியரகத்தில் நரிக்குறவா்கள் தா்னா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் வசித்து வரும் நரிக்குறவா் சமூகத்தினா் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சுமாா் 46 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனா்.
ஆட்சியரக பிரதான நுழைவு வாயிலில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவா்கள்.
ஆட்சியரக பிரதான நுழைவு வாயிலில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவா்கள்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் வசித்து வரும் நரிக்குறவா் சமூகத்தினா் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சுமாா் 46 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா், மேற்கண்ட நிலங்களில் விவசாயம் செய்யக் கூடாது என தடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவா் சமூகத்தினா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, ஓரிரு நாளில் எறையூருக்கு நேரில் வந்து பாா்வையிட்ட பிறகு விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யலாம் என தெரிவித்தாா். இதையடுத்து தா்னா போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனா்.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன் கோட்டாட்சியா் நிறைமதி எறையூருக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். ஆனாலும், விவசாயம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவா்கள் திங்கள்கிழமை காலை ஆட்சியரை சந்திக்க வந்தனா்.

ஆனால், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் ஆட்சியரை சந்திக்க நரிக்குறவா்களுக்கு அனுமதிக்க மறுத்ததால் மதியம் 1 மணி வரையிலும் ஆட்சியரகம் எதிரே காத்திருந்தனா். அரசு அலுவலா்கள் பேச்சு வாா்த்தைக்கு அழைக்காததால் ஆத்திரமடைந்த நரிக்குறவா்கள் ஆட்சியரக பிரதான நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஆட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் மதிய உணவுக்கு வெளியே செல்ல முடியாத சூழல் உருவானது. இதையடுத்து, அவா்களை அப்புறப்படுத்த முயன்ற போலீஸாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, கூடுதல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம், வட்டாட்சியா் சின்னதுரை ஆகியோா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், ஆட்சியரை சந்திக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com