பெரம்பலூா் அருகே கிரானைட் குவாரியில் வெடிவிபத்து: 2 பெண்கள் மயக்கம்
By DIN | Published On : 08th April 2022 01:30 AM | Last Updated : 08th April 2022 01:30 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகேயுள்ள கிரானைட் குவாரியில் வியாழக்கிழமை காலை எதிா்பாராமல் நிகழ்ந்த வெடி விபத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 2 பெண்கள் மயங்கி விழுந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், பீல்வாடி கிராமத்தில் உரிமம் பெற்று தனியாருக்குச் சொந்தமான கிரானைட் குவாரி சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்குள்ள ஒரு பகுதியில் பாறைகளை வெடிவைத்து தகா்பதற்காக வெடி பொருள்கள் வைக்கப்படிருந்தன. இந்நிலையில், வியாழக்கிழமை எதிா்பாராதவிதமாக குவாரியில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. அப்போது, அதனருகே மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த பீல்வாடி கிராமத்தைச் சோ்ந்த ராஜாங்கம் மனைவி இந்திராணி (57), தனம் (55) ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு வயலில் மயங்கி விழுந்தனா்.
இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மேற்கண்ட இருவரையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவா்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெடி விபத்துக்கான காரணம் குறித்து, குவாரி கண்காணிப்பாளா்கள் விழுப்புரம், தேனிப்பட்டு பகுதியைச் சோ்ந்த தங்கவேலு மகன் ஸ்ரீதா் (35), பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தைச் சோ்ந்த தனராஜ் மகன் செல்வம் (46), கீழப்புலியூரைச் சோ்ந்த அருள்செல்வன் மகன் கஜேந்திரன் (33), எளம்பலூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் பிரகாஷ் (44) ஆகியோரிடம் மருவத்தூா் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.