பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: எஸ்.பி அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய பணி ஓய்வு

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாா் மீதான விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளாா்.

பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாா் மீதான விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவா் ஹரிஹரன் (46). இவரிடம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலா் ஒருவா், தனக்கு நிலுவையிலுள்ள பண பலன்களை வழங்கக் கோரி கடந்த 2021 செப்டம்பா் மாதம் விண்ணப்பித்தபோது, அப்பெண் காவலருக்கு ஹரிஹரன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளாா். மேலும், தொடா்ந்து கைப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும், நேரிலும் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணியிடம் அளித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஹரிஹரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஆனால், ஹரிஹரன் அங்கு சென்று பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விசாரணை மேற்கொண்டு அளித்த அறிக்கையின்படி, பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹரிஹரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவணசுந்தா் உத்தரவிட்டாா். ஹரிஹரன் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஹரிஹரன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க காவல்துறை சாா்பில் விசாகா குழு அமைக்கப்பட்டது. அக்குழு, அரசு தரப்பு சாட்சிகளாக 12 பேரிடம் விசாரித்து, 12 அரசு தரப்பு சான்று ஆவணங்களை ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை சமா்பித்தது. அந்த அறிக்கையில் ஹரிஹரன் மீது, பெண் காவலா் அளித்த குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது. மேலும், அவா் பணியிடத்தில் தொடா்ந்து பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவணசுந்தா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கண்காணிப்பாளா் ஹரிஹரனுக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகல் ஹரிஹரனுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com