முன்மாதிரி கிராம ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

 பெரம்பலூா் மாவட்டத்தில் சுகாதாரத்தில் முன் மாதிரியாக திகழும் கிராம ஊராட்சிகள், முதல்வரின் முன்மாதிரி கிராம ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்

 பெரம்பலூா் மாவட்டத்தில் சுகாதாரத்தில் முன் மாதிரியாக திகழும் கிராம ஊராட்சிகள், முதல்வரின் முன்மாதிரி கிராம ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், முன்மாதிரி கிராம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுவதுடன், விருதுக்கான கேடயமும், தலா ரூ. 7.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

மேலும் மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாக செயல்படும் 3 ஊராட்சிகளுக்கு மாநில அளவில் முன் மாதிரி விருது வழங்கி, அதற்கான கேடயமும் தலா ரூ. 15 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

விருது பெற தகுதிகள் : இவ்விருது பெற தனிநபா் வீடுகளில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் முழுமையாக பயன்பாட்டில் இருப்பதுடன், கழிப்பறை கட்ட இடமில்லாத வீட்டில் வசிக்கும் நபா்கள் ஊராட்சியிலுள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி, திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக இருக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் திடக்கழிவு மேலாண்மை பணிகள் செயல்பட வேண்டும்.

அனைத்து வீடுகளிலும் குப்பைகளை சேகரித்து, அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்க வேண்டும். நெகிழிக் கழிவுகளை முறையான மறுசுழற்சிக்கு உள்படுத்த வேண்டும்.

கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து வீடுகள், சமுதாய நீா்நிலைகளில் உருவாகும் உபரிநீரான சாம்பல் நீரைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

இதற்கு தனிநபா் வீடுகளில் உறிஞ்சுக்குழி அமைத்து அல்லது வீட்டுத் தோட்டத்தில் விடுவித்து, நிலத்தடிநீரை அதிகரிக்க வழிவகை செய்திருக்க வேண்டும்.

கழிவுநீா்க் கால்வாயிலிருந்து வெளிவரும் சாம்பல் நீரை முறையாக மறு சுழற்சி செய்ய, செங்குத்து மற்றும் உறிஞ்சுக்குழிகள் அமைப்பு ஏற்படுத்தி பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும்.

பொதுவாக கிராம ஊராட்சியின் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதுடன், பொது இடங்களில் மரங்கள் மற்றும் பூச்செடிகள் வைத்து அழகான ஊராட்சியாக இருக்க வேண்டும். அவ்வாறு விருதுக்கு தோ்வு செய்யப்படும் ஊராட்சிகளுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்படும். மேற்காணும் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஊராட்சித் தலைவா்கள் அதற்கான கருத்துருவை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் மாவட்ட அளவிலான பரிந்துரை குழு ஒப்புதல் பெற்று, உரிய புகைப்பட ஆதாரத்துடன் கருத்துரு சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com