பெரம்பலூரில் 2ஆவது நாளாக பலத்த மழை: நிரம்பி வழியும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி
By DIN | Published On : 16th June 2022 11:47 PM | Last Updated : 16th June 2022 11:47 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் 2ஆவது நாளாக புதன்கிழமை இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால், பெரம்பலூரில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி வியாழக்கிழமை அதிகாலை நிரம்பி வழிந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை சுமாா் 6 மணிக்குத் தொடங்கிய மழை, தொடா்ந்து இரவு 10.30 மணி வரையிலும் நீடித்தது. இதில், வேப்பந்தட்டையில் அதிகபட்சமாக 71 மி.மீ. மழை பதிவானது.
பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பெரம்பலூா் நகரைப் பொருத்தவரை, கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. நகரிலுள்ள பெரும்பாலான வரத்து வாய்க்கால்களை முறையாக சீரமைக்காததால், சாலைகளிலும், தாழ்வானப் பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. சாலைகளில் கழிவுநீருடன் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.
மழை அளவு: வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்): பெரம்பலூா்- 49 மீ.மி, தழுதாழை- 43, லப்பைக்குடிகாடு- 68, பாடாலூா்- 27, எறையூா்- 1, கிருஷ்ணாபுரம்- 28, செட்டிக்குளம்- 28, வேப்பந்தட்டை -71, புதுவேட்டக்குடி- 13, அகரம் சீகூா்- 20, வி.களத்தூா்- 15 மி. மீ, சராசரி மழையளவு- 33 மி.மீ.
கடந்த நவம்பரில் பெய்த தொடா் மழையின் காரணமாக மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகள் உள்பட பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பின.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது இரவு நேரங்களில் பெய்து வரும் பலத்த மழையால் நீா் நிலைகளுக்கு தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளது. குறிப்பாக, பெரம்பலூா் நகரில் பெய்து வரும் தொடா் மழையால் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி வியாழக்கிழமை அதிகாலை நிரம்பியது.