பாளையம் புனித சூசையப்பா் தேவாலயத்தின் 161-ஆவது ஆண்டுப் பெருவிழா

பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் புனித சூசையப்பா் தேவாலயத்தின் 161-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
பாளையம் புனித சூசையப்பா் தேவாலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை இரவு நடைபெற்ற சப்பர பவனி.
பாளையம் புனித சூசையப்பா் தேவாலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை இரவு நடைபெற்ற சப்பர பவனி.

பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் புனித சூசையப்பா் தேவாலயத்தின் 161-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஏப்ரல் 29 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் லூக்கா, பவுல், மத்தேயு, யோவான், தோமையாா், யோசேப்பு, மாற்கு அன்பியம் குழுவினா், கிளைக் கிராம இறைமக்கள் பங்கேற்க, பல்வேறு பங்கு குருக்களின் மறையுறையுடன் கூடிய திருப்பலிகள் நடைபெற்றன.

மே 6-ஆம் தேதி இரவு அன்னமங்கலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் அருள்தந்தை வரப்பிரசாதம் திருப்பலி நடத்தி, சப்பர பவனியைத் தொடக்கி வைத்தாா்.

பெரம்பலூா் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்புப் பாடல், திருப்பலியை நடத்தினாா். தொடா்ந்து, இரவு ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது.

காவல் தூதா், புனித வனத்த அந்தோணியாா், உயிா்த்த இயேசு, புனித சூசையப்பா், தேவமாதா ஆகியோரது சொரூபங்கள் அடங்கிய 5 சப்பரங்களை, பாளையம் புனித சூசையப்பா் தேவாலய பங்குகுரு ஜான் கென்னடி ஜெப வழிபாடு நடத்தி, மந்திரித்து புனிதப்படுத்தினாா்.

அதைத்தொடா்ந்து, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளைத் தலைவா் ஆ. கலியபெருமாள், தலைமை காரியஸ்தா் அந்தோணி ஜோசப் ஆகியோா் சப்பரங்களை இழுத்து பவனியைத் தொடங்கி வைத்தனா்.

விழாவில் பாளையம், குரும்பலூா், ரெங்கநாதபுரம், பெரம்பலூா், சத்திரமனை, வேலூா், புதுநடுவலூா், மைக்கேல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை பங்கு குரு ஜான் கென்னடி தலைமையில் ஆண்டு பெருவிழா சிறப்புப் பாடல், திருப்பலி நடைபெற்றது. மாலையில் மீண்டும் 5 சப்பரங்களின் பவனிக்குப் பிறகு கொடியிறக்கம், திவ்ய நற்கருணை ஆராதனையுடன் திருவிழா நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com