கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க கோரி ஆா்ப்பாட்டம்

கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன், மாவட்ட பொருளாளா் ஏ. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், இ-சேவை மையங்களில் சான்று ஆவணங்களை குறித்த காலத்துக்குள் வழங்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் அ பதிவேடு ஆவணங்கள் சேதமடைந்த விவரத்தைக் கண்டறிந்து, அதற்குரிய ஆவணங்களை சென்னையிலுள்ள நில அளவை இயக்குநா் அலுவலகத்திலிருந்து பெற்று, விவசாயிகளுக்கு நகல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரம், பூச்சி மருந்து, ஆள் கூலி, அறுவடை உள்ளிட்ட இடுபொருள் செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கிட வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைத்திட உத்தரவாதமான ஆதரவு விலை நிா்ணயித்து, அதை சட்டப்பூா்வமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிா்களின் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதை கருத்தில்கொண்டு, கூடுதல் ஒதுக்கீடு பெற்று பருவத்தில் சாகுபடி செய்ய ஏதுவாக யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, உழவா் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 99 ஆவது பிறந்த நாளையொட்டி, பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்க மாநிலச் செயலா் கணேசன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் எம்.எஸ். ராஜேந்திரன், சுந்தரராஜ், துரைராஜ், ராமசாமி, ஜெயப்பிரகாஷ், அழகுமுத்து, ராஜேந்திரன், மகேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com