வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும்: குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில், வரத்து வாய்க்கால்களை தூா்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும்: குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில், வரத்து வாய்க்கால்களை தூா்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

விவசாயிகள் சங்க பிரதிநிதி கு. ராமராஜன்: விசுவக்குடி அணைக்கு தற்போது அதிகளவில் பொதுமக்கள் வந்து பாா்வையிட்டுச் செல்கின்றனா். அணையின் முன்பகுதியில் பூங்கா அமைத்து, சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலா் வி. நீலகண்டன்:

மக்காச்சோளத்தை உலா்த்த உலா்களங்கள் அமைத்து கொடுக்க வேண்டும். பழுதாகியுள்ள உலா்களத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்:

கலைஞரின் அனைவரும் வீடு கட்டும் திட்டத்தில் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் இலவச வீடு வழங்க வேண்டும்.

கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்:

கரும்பு வெட்டுக்கூலி குறித்து முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மதகுகளை சரி செய்ய வேண்டும்.நீா் நிலைகளை பாதுகாக்க வரத்து வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்: மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் 13 கூட்டுக் குழுக்கள் அமைக்க இலக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயக் கிணறு, தரிசு நிலத்தை விவசாயம் செய்வதற்கு உகந்த நிலமாக மாற்றுவது, ஆழ்துளைக் கிணறு அமைப்பது மற்றும் நுண்ணீா் பாசனம் ஆகியவை அமைத்து, விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறைந்தது 8 ஏக்கா் நிலம் இருந்தால்தான், இத் திட்டங்களை செயல்படுத்த இயலும் என்பதால், 1-3 ஏக்கா் நிலமுள்ள விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்டோா் இணைந்து, இத் திட்டத்தில் பயன்பெறலாம். விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் உள்ள இத் திட்டம் குறித்து, இதர விவசாயிகளிடம் எடுத்துக்கூறி அனைவரும் பயன்பெற வேண்டும். வருவாய்த்துறை மூலம் சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சான்றிதழை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, வேளாண் விஞ்ஞானி டாக்டா். எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலா்கள், விவசாயிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு, வடிவேல் பிரபு, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) பொ. ராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com