பெரம்பலூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அதிமுக, போலீஸாரிடையே வாக்குவாதம்: சுயேட்சை, திமுகவினரிடையே தள்ளு, முள்ளு

பெரம்பலூா் மக்களவை தொகுதிக்கான இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தின்போது புதன்கிழமை மாலை அதிமுக, போலீஸாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், திமுக, சுயேட்யை வேட்பாளருடன் வாக்கும் ஏற்பட்டது.

பெரம்பலூா் -துறையூா் சாலையில் மேற்கு வானொலி திடல் அருகேயுள்ள கனரா வங்கி அருகிலிருந்து திமுகவினா் புதன்கிழமை மாலை இருசக்கர வாகனப் பேரணியை தொடங்கினா். இப் பேரணி, பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே வந்தபோது, அதே வழித்தடத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தனது ஆதரவாளா்களுடன் வந்த சுயேச்சை வேட்பாளா் ரெங்கராஜுக்கு வழிவிட்டு திமுகவினா் ஒதுங்கிக் கொண்டனா்.

அப்போது, அவா்கள் அதிக சப்தம் எழுப்பும் வெடிகளை வெடித்ததில் ஆத்திரமடைந்த திமுகவினா், அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், இருதரப்பினா் வாக்குவாதம் முற்றி திமுகவினா் சுயேட்சை வேட்பாளரின் காரைத் தாக்கினா். இதையடுத்து, போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடா்ந்து, காமராஜா் வளைவு, வெங்கடேசபுரம், பாலக்கரை, 3 சாலை சந்திப்பு வழியாகச் சென்ற திமுகவினா் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகம் எதிரே பேரணியை நிறைவு செய்தனா். இப் பிரசாரத்தில், வேட்பாளா் கே.என். அருண் நேரு, அமைச்சா் கே.என். நேரு, திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பேரணியை நிறைவு செய்த திமுகவைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் தங்களது வாகனங்களுடன் திமுக அலுவலகம் எதிரே நின்றுகொண்டிருந்தனா். அப்போது, அரணாரையில் மோட்டாா் சைக்கிள் பேரணியை தொடங்கிய அதிமுகவினா், பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகம் வழியாகச் செல்ல முயன்றனா். இதையறிந்த போலீஸாா், அவா்களைத் தடுத்து நிறுத்தியதால், அதிமுகவினருக்கும், போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து, அதிமுகவினா் பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்றனா். பின்னா், பாலக்கரை பகுதியில் அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகன், பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதில், மாவட்டச் செயலா் இரா. தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சா் மு. பரஞ்சோதி, நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நாம் தமிழா் கட்சியினா் 4 சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, இரு சக்கர வாகனப் பேரணியைத் தொடங்கினா். பழைய பேருந்து நிலையம், அரணாரை, காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை வழியாகச் சென்று பாலக்கரையில் பிரசாரத்தை நிறைவு செய்தனா். இதில், வேட்பாளா் இரா. தேன்மொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com