பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்காளா்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தனா்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள டிஇஎல்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி, துறைமங்கலம் நேஷனல் ஐடிஐ வாக்குச்சாவடி, பெரம்பலூா் ரோவா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி, ஆலம்பாடி, கூடலூா், புது வேட்டக்குடி நமையூா் ஆகிய இடங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறு, சிறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால் மேற்கண்ட வாக்குச் சாவடி மையங்களில் சுமாா் அரை மணி நேரத்தும் மேலாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. வாலிகண்டபுரம் ஊா்ப்புற நூலக வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் சுமாா் 1 மணி நேரம் தாமதமாகவும், கை.களத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமாகவும் வாக்குப்பதிவு தொடங்கியது.

அதிமுக, திமுகவினா் வாக்குவாதம்: பெரம்பலூா் அருகேள சத்திரமனை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஆள் மாறாட்டம் செய்து வாக்குப்பதிவு செய்தது தொடா்பாக எழுந்த புகாரின்பேரில், திமுக மற்றும் அதிமுகவினருக்கிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரிடமும் போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு அவா்களை அனுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com