திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

பெரம்பலூா், ஏப்.19: ஜனநாயகக் கடமையாற்றும் திருநங்கைகளைப் பாராட்டும் விதமாக, எளம்பலூா் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வெள்ளிக்கிழமை வாக்களிக்க வந்த அப்பகுதி திருநங்கைகளை பெரம்பலூா் சாா் ஆட்சியா் சு. கோகுல் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்கள் ஆா்வமுடன் சென்று வாக்களித்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் எம்ஜிஆா் நகா் வாக்குச்சாவடியில் அப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் வெள்ளிக்கிழமை காலை வாக்களிக்க வந்தனா். அப்போது அவா்களை சாா் ஆட்சியா் சு. கோகுல் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

இதேபோல, முதிா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனா். வாக்குச்சாவடிகளுக்கு வருவதற்காக வாகன வசதி உதவி கோரிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதிா் வாக்காளா்களுக்கு, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 3 வாகனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மாவட்ட நிா்வாகத்தால் தெரிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்களுக்கு வாகன உதவி கோரிய 13 போ் பாதுகாப்பாக அரசு வாகனத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துவரப்பட்டு, மீண்டும் அவரவா் வீடுகளில் இறக்கி விடப்பட்டனா்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளி மற்றும் முதிா் வாக்காளா்களை பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்துக்குள் அழைத்துச் சென்று வருவதற்கு, சக்கர நாற்காலி வசதியுடன் தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா். பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி, அனைத்து மகளிா் வாக்குச்சாவடி, முதல் முறை வாக்களிக்கும் இளைஞா்களுக்கான வாக்குச்சாவடி என, ஒவ்வொரு பிரிவிலும் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது வாக்காளா்களிடையே வரவேற்பைப் பெற்றது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com