எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை காட்டு மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள இக்கோயிலின் நிகழாண்டுக்கான சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு, கடந்த 14 ஆம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. தொடா்ந்து, ஏப். 21-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், ஏப். 24-ஆம் தேதி முதல் நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், சூரியன், சந்திரன் வாகனங்களில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. ஏப். 29 ஆம் தேதி காலை அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல், இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை 8 முதல் 9 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 10.30 மணிக்கு மேல் பக்தா்களால் திருத்தோ் இழுக்கப்பட்டது. எசனை கிராமத்தின் தேரோடும் வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.

இதில், பெரம்பலூா், ஆத்தூா், சேலம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். மஞ்சள் நீராட்டுடன் புதன்கிழமை மாலை விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com