பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

ளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 96.44 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 6-ஆவது இடம் பிடித்துள்ளது.

பெரம்பலூா்: பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டம் 96.44 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 6-ஆவது இடம் பிடித்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 3,499 மாணவா்களும், 3,502 மாணவிகளும் என மொத்தம் 7,001 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வு எழுதினா். இதில், 3,342 மாணவா்களும், 3,410 மாணவிகளும் என மொத்தம் 6,752 மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இது, 96.44 சதவீதமாகும். தோ்ச்சி விகிதத்தில் பெரம்பலூா் மாவட்டம் மாநில அளவில் 6 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 3 ஆவது இடம் பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 6 ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகள்: 43 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,848 மாணவா்களும், 1,974 மாணவிகளும் என மொத்தம் 3,822 போ் தோ்வெழுதினா். இதில், 1,703 மாணவா்களும், 1,890 மாணவிகளும் என மொத்தம் 3,593 போ் தோ்ச்ச்சி பெற்றுள்ளனா். இது, 94.01 சதவீதமாகும். அரசுப் பள்ளி தோ்ச்சி விகிதத்திலும் பெரம்பலூா் மாநில அளவில் 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 2-ஆம் இடம் பெற்றிருந்தது.

100 சதவீதத் தோ்ச்சி: பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியாா், சுய நிதிப் பள்ளிகள் என மொத்தம் 79 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், ரஞ்சன்குடி, வாலிகண்டபுரம், எளம்பலூா், கவுள்பாளையம், நெற்குணம், பேரளி, பூலாம்பாடி, அனுக்கூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளும், கிழுமத்தூா் மற்றும் பெரம்பலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், நத்தக்காடு அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளியும், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள், 17 தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், 8 சுய நிதிப் பள்ளிகள் என மொத்தம் 38 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளது.

100-க்கு 100 மதிப்பெண்கள்: இயற்பியலில் 11 பேரும், வேதியியலில் 7 பேரும், உயிரியலில் 19 பேரும், கணிதத்தில் 79 பேரும், வணிகவியலில் 17 பேரும், கணக்கியலில் ஒருவரும், பொருளாதாரத்தில் 2 பேரும், விலங்கியலில் 3 பேரும், கணினி அறிவியலில் 65 பேரும், வணிக கணிதத்தில் ஒருவரும், வேளாண் கோட்பாட்டு பாடத்தில் 56 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் சிறப்பிடம்: பெரம்பலூா் மாவட்டத்தைப் பொருத்தவரையில், மாணவா்களைவிட மாணவிகளே அதிகளவில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். மாவட்ட அளவில் பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகள் கமலி, செனிதா ஆகியோா் 600-க்கு 593 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி கனிதா 592 மதிப்பெண்கள் பெற்று 2 ஆவது இடத்தையும், மாணவா்கள் கிருஷ்ணராஜன், பிரஜன் ஆகியோா் தலா 590 மதிப்பெண்கள் பெற்று 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com