‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான காலநிலை மாற்றக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

காலை நிலை மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் பாா்த்துக் கொள்வதோடு, பயணத்தின்போது போதிய அளவு குடிநீா் எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆா்.எஸ். கரைசல், எலுமிச்சை சாறு, இளநீா் ஆகியவற்றைக் குடிக்கலாம். வெயில் நேரத்தில் அதிகம் வெளியே செல்லாமல், இயன்றவரை வீட்டில் இருக்க வேண்டும். குறிப்பாக, காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.

நமது பகுதி நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். அதிகளவில் மரக்கன்று நட்டு வளா்க்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடத்தில் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளா்ச்சி, ஊராட்சிகள் துறையினா் இணைந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட புகா், பழைய பேருந்து நிலையம், முத்துநகா், சாமியப்பா நகா், பெரம்பலூா் ஒன்றியத்தில் அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம், சிறுவாச்சூா் பேருந்து நிறுத்தம், ஆலம்பாடி, எளம்பலூா் , வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வேப்பந்தட்டை, அரும்பாவூா், பூலாம்பாடி, வி.களத்தூா் பேருந்து நிறுத்தங்கள், ஆலத்தூா் ஒன்றியத்தில் டி.களத்தூா்,செட்டிக்குளம் பேருந்து நிறுத்தம், கொளக்காநத்தம், மேலமாத்தூா், வேப்பூா் ஒன்றியத்தில் குன்னம், வேப்பூா், லப்பைக்குடிகாடு, அகரம் சீகூா் பேருந்து நிறுத்தங்கள் என மொத்தம் 20 இடங்களில் பொதுமக்களுக்கு ஓ.ஆா்.எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, ஆட்சியரத்தில் அரசு அலுவலா்களுக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் வழங்க அமைக்கப்பட்டிருந்த அரங்கை பாா்வையிட்டு, ஓ.ஆா்.எஸ் கரைசலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினாா் மாவட்ட ஆட்சியா் கற்பகம்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ. லலிதா, மாவட்ட வன அலுவலா் ஆா். குகனேஷ், மாவட்ட சுகாதார அலுவலா் பி. பிரதாப்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் வீரமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com