புதுக்கோட்டையில் 6-வது ஆண்டாகத் தொடர்கிறது வறட்சி : மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எந்த மாவட்டத்தையும்விட தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மழையின்றித் தொடரும் வறட்சியால் விவசாயம் 90 சதவிகிதம் அழிந்துபோனது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எந்த மாவட்டத்தையும்விட தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மழையின்றித் தொடரும் வறட்சியால் விவசாயம் 90 சதவிகிதம் அழிந்துபோனது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் நிலையில், புதுகையிலுள்ள அனுமன் கோயிலில் மழைக்காக சிறப்பு யாக பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பெரும்பாலும் வறட்சியைச் சந்திக்கும் மாவட்டமாகவே இருந்து வருகிறது. 90 சதவிகித விவசாய நிலங்கள் நீர் ஆதாரத்துக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் மழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கின்றன. மாவட்டத்தில் ஏறத்தாழ 6000 கண்மாய்கள் உள்ள நிலையில், இவற்றிலிருந்து கிடைக்கும் நீர் ஆதாரமே மாவட்டத்தின் விவசாயத்துக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. மிகப்பெரிய கண்மாய்களாக புதுக்கோட்டை கவிநாடு கண்மாய், ஆலங்குடி வல்லநாடு கண்மாய் ஆகியவை உள்ளன. மேலும் வெள்ளாறு, குண்டாறு, பாம்பாறு, அம்புலியாறு, கோரையாறு, சூறையாறு உள்ளிட்ட காட்டாறுகளும் ஆதாரமாக உள்ளன. நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை ஏமாற்றியது. வடகிழக்குப் பருவமழையை நம்பி மாவட்டத்தில் நேரடி மற்றும் நடவு நெல் சாகுபடி 90 சதவிகிதம் கருகிவிட்டது. கடந்த 6 ஆண்டுகளாக பேதிய மழை இல்லாததால் நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டு போனதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கிணறுகள் நீரில்லாமல். மக்கள் குடிப்பதற்கு தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் நிலையோ இன்னும் மோசம். இந்நிலையில் புதுக்கோட்டை நகரின் தெற்கு நான்காம் வீதியிலுள்ள அனுமன் கோயிலில் மழைக்காக சனிக்கிழமை வருண ஜெபம் நடத்தப்பட்டது.
அனுமன் திருச்சபை சார்பில் அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்ற யாக பூஜைகளை மணிகுருக்கள், ரவிகுருக்கள், ரகுசிவசுப்பிரமணியன், சண்முகராஜன், தயானந்த ஓதுவார், ராஜா ஆகியோர் பங்கேற்று நடத்தினர். இதையொட்டி அனுமனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதில், மூத்த வழக்குரைஞர் சொக்கலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com