மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

பொன்னமராவதி, மே 19: புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னமராவதி, மே 19: புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியில் கல்குவாரிகள் அதிகம். அவற்றைச் சார்ந்த கிராமங்களில் அங்குள்ள கல்குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் குப்பப்பட்டி குடியிருப்பு பகுதியில் இரவோடு இரவாக டாஸ்மாக் கடை திறந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கல்குவாரியில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான பெண்கள் அந்த மதுக் கடையை முற்றுகையிட்டு, கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் கடையின் கதவைப் பூட்டியதால், மதுவகைகள் சேதத்திலிருந்து தப்பின. அங்கு வந்த அதிகாரிகளிடம் கடையை மூட வேண்டும். இல்லையெனில் தங்களுக்கும் மதுவை விற்க வேண்டும். அதில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தால் அனைவரும் கலைந்து சென்றனர்.
பொன்னமராவதியில்...
பொன்னமராவதி ஜெ.ஜெ. நகர் நெடுஞ்சாலையோரத்தில் இயங்கிவந்த அரசு மதுக்கடை உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அண்மையில் அகற்றப்பட்டு, ஜெ.ஜெ. நகர் அருகில் உள்ள தாழ்ப்பாக்கண்மாய் பகுதி வயல்வெளியில் வியாழக்கிழமை முதல் இயங்கிவந்துள்ளது. அதற்கான கட்டுமானப்பணியும் அருகில் நடைபெற்று வந்தது.
இதைக்கண்ட அப்பகுதி பெண்கள் மது அருந்துவோர் பாட்டில்களை உடைப்பதாலும், பிளாஸ்டிக் கப்புகளை வயல்வெளியில் வீசுவதாலும் விவசாயம் பாதிப்புக்குள்ளாகிறது எனக்கூறி அரசு மதுக்கடையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் ஆர். கார்த்திகைசாமி, உதவி ஆய்வாளர் குணசேகரன், விஏஓ ரமேஷ் ஆகியோர் மதுக்கடையை அகற்றுவதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com