புதுகை மாவட்டத்தில் பாதிப்புகள் முறையாக கணக்கிடப்படவில்லை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முறையாகக் கணக்கிடப்படவில்லை என்றார் காங்கிரஸ் கட்சியின்


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முறையாகக் கணக்கிடப்படவில்லை என்றார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர்.
புதுக்கோட்டையில் திருவப்பூர், அழகம்பாள்புரம், பெரியார் நகர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
புயலினால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து இருப்பது போதாது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு நிதியாக குறிப்பிட்ட தொகையை உடனே வழங்க வேண்டும். தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஆனால், புயலுக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிப்பதிலும் தாமதமாக நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலில் தமிழக முதல்வரும், மத்திய அமைச்சர்களும் பார்வையிட வேண்டும். பெரும்பாதிப்புகளை சந்தித்துள்ள தமிழகம், இந்தியாவில்தான் இருக்கிறதா என்றுகூடத் தெரியாத அளவிற்கு அரசு மெத்தனமாக செயல்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிடவும், நிவாரணம் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். மின் பாதிப்புகளை உடனே சீரமைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அலுவலர்கள் பார்வையிட்டு முறையாக கணக்கிடாததால் தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், போராடுவது நியாயமானதுதான். அதேசமயம், அதில் வன்முறையாக இருக்கக்கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com