திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம்

நிதி ஆதாரங்களை கவனத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம்

நிதி ஆதாரங்களை கவனத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம் என்றார் பாஜக தேசியச் செயலரும் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான ஹெச். ராஜா.
இவரும், திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர் டாக்டர் வி. இளங்கோவன் ஆகியோரும் புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
அதிமுக அமைப்புச் செயலரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அதிமுக செயலரும் வீட்டுவசதி வாரியத் தலைவருமான பி.கே. வைரமுத்து, நகரச் செயலர் க. பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  தொடர்ந்து ஹெச். ராஜா அளித்த பேட்டி:
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி 40 இடங்களிலும்  மகத்தான வெற்றி பெறும். இது இயற்கையாக அமைந்த கூட்டணி.
சிவகங்கை தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி. இதுவரை ப. சிதம்பரம் ராஜாவாக உலா வந்தார். இந்த ராஜா வெற்றி பெற்றால் மக்கள் ராஜாவாக உலா வருவார்கள்.
ஒரு கோடிப் பேருக்கு வேலை தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிதி ஆதாரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கை வெற்று காகிதம். நீட் தேர்வு குறித்து தேர்தல் முடிவுக்குப் பின் மத்திய, மாநில அரசுகள் கூடி முடிவெடுக்கும்.
காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவுக்கு அனுப்பியிருக்கிறேன். 100 சதவிகித மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார் ராஜா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com