நெடுவாசலில் 110 ஏக்கர் ஏரியை தூர்வாரும் பணி தொடக்கம்

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் இளைஞர்கள், கிராமத்தினர் இணைந்து சொந்த செலவில் சுமார் 110 ஏக்கர்

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் இளைஞர்கள், கிராமத்தினர் இணைந்து சொந்த செலவில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவிலான ஏரியை  தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை செய்து தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாசனம் பெரும் சில கிராமங்களில் நெடுவாசலும் ஒன்று. ஆனால், சில ஆண்டுகளாக காவிரி நீர் கிடைக்கவில்லை. இதனால், சாகுபடிகள் முழுவதும் ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே நடைபெற்று வருகிறது. போதிய மழையும் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், ஆலங்குடி வட்டத்தில் பல ஆழ்குழாய் கிணறுகள் நீரின்றி பயன்பாடற்று போனதால், விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. 
இந்நிலையில், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து அவர்களது சொந்த செலவில் நீர்நிலைகளை தூர்வாரி வருகின்றனர். அதேபோல, நெடுவாசலிலும் இளைஞர்கள், கிராமத்தினர் இணைந்து அப்பகுதியில் உள்ள சுமார் 110 ஏக்கர் பரப்பளவிலான நெடுவாக்குளம் பாசன ஏரியை தூர்வார முடிவு செய்து, அதற்கான பணியை ஞாயிற்றுக்கிழமை பூஜையுடன் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து, நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
   இதுகுறித்து, அப்பகுதி இளைஞர்கள் கூறியது:
நெடுவாசலை சுற்றியுள்ள பல கிராமத்தினருக்கு ஹைட்ரோகார்பன், புயல் பாதிப்பு உள்ளிட்ட  பல பிரச்சனைகள் உள்ளன. மேலும், தற்போது தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. அதற்கு முன்னெச்சரிக்கையாகத்தான் குளம் தூர்வாரும் பணியை கிராம மக்களே இணைந்து செய்ய தொடங்கி விட்டோம். கடந்த ஆண்டு ஆற்றுவாய்க்காலை வெட்டினோம். இந்த ஆண்டு குளங்களை சீரமைக்கத் தொடங்கியுள்ளோம். நெடுவாக்குளத்தில் தண்ணீர் நிறைந்தால் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். மேலும், பக்கத்து கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது அவர்களுக்கும் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது. அந்த முறையை மீண்டும் கடைப்பிடிப்போம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com