மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்
By DIN | Published On : 22nd August 2019 09:43 AM | Last Updated : 22nd August 2019 09:43 AM | அ+அ அ- |

விராலிமலை அருகே மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விராலிமலை வட்டம், வெம்மணியில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்த அறிவிப்பு கொண்ட துண்டுபிரசுரங்களை பெரியமூலிப்பட்டி பகுதியில், 100 நாள் பணியாளர்களிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் வெம்மணி சிதம்பரம், நீர்பழனி செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
அப்போது அப்பகுதியிலுள்ள காட்டாற்றிலிருந்து இருவர் டிராக்டரில் மணல் அள்ளிச் செல்வதை கண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சிதம்பரம், செந்தில்குமார், மோட்டார் சைக்கிளில் அவர்களை விரட்டிச் சென்று தடுத்து விசாரித்தனர்.
அப்போது டிராக்டரிலிருந்த பெரியமூலிப்பட்டி சிட்டு மகன்கள் குமார்(45),கோவிந்தராஜ் (42) ஆகிய இருவரும், சிதம்பரத்தை கையாலும், கட்டையாலும் தாக்கினர். தடுக்கமுயன்ற செந்தில்குமாரையும் தாக்க முயன்றுள்ளனர். பின்னர் குமார், கோவிந்தராஜ் மணலுடன் கூடிய டிராக்டரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து மண்டையூர் காவல் நிலையத்தில், கிராம நிர்வாக அலுவலர் சிதம்பரம் அளித்த புகாரின் பேரில், இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.