வம்பனில் வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்று வழங்கிய தேநீரக உரிமையாளர்
By DIN | Published On : 22nd August 2019 09:41 AM | Last Updated : 22nd August 2019 09:41 AM | அ+அ அ- |

கஜா புயல் பாதிப்பின்போது, வம்பன் நான்குச் சாலைப் பகுதியிலுள்ள தனது கடை வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்த தேநீரக உரிமையாளர், வாடிக்கையாளர்களுக்கு புதன்கிழமை மரக்கன்றுகளை வழங்கினார்.
கஜா புயல் பாதிப்பால் ஆலங்குடி வட்டத்தில் தென்னை, மா,பலா, உள்ளிட்ட மரங்களும், நெல்,சோளம், வாழை உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்ததால், வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் ஆலங்குடி அருகிலுள்ள வம்பன் நான்குச்சாலைப் பகுதியில் தேநீரகம் நடத்திவரும் சிவக்குமார் (42), தனது கடையில் தேநீர் குடித்து, வடை சாப்பிட்ட வகையில் வாடிக்கையாளர்கள் நிலுவை வைத்திருந்த கடன்தொகை முழுவதையும் தள்ளுபடி செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
தற்போது அப்பகுதியில் புயலால் இழந்த மரங்களை மீட்கும் வகையில்,தனது தேநீரக வாடிக்கையாளர்களுக்கு சுமார் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள தேக்கு, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை புதன்கிழமை இலவசமாக வழங்கினார்.
இவரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.