அமைச்சு பணியாளர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு
By DIN | Published On : 30th July 2019 09:44 AM | Last Updated : 30th July 2019 09:44 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைச்சுப் பணியாளர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி வழங்கினார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் எஸ்.நாகராஜன் செயல்முறையின் படி அன்றைய நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் வழங்குவது சார்ந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பாளர்கள் 3 பேர், உதவியாளர்கள் 7 பேர், தட்டச்சர்கள் 6 பேர், இளநிலை உதவியாளர்கள் 5 பேர் என மொத்தம் 21 பேர் கலந்துகொண்டனர்.
பணிமாறுதலில் பங்கேற்ற 21 பேருக்கும் பணிமாறுதல் ஆணைகளை த.விஜயலெட்சுமி வழங்கி, சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தினார். நிகழ்வின்போது முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம், கபிலன் ஆகியோர் உடனிருந்தனர்.