அறந்தாங்கி: கட்டணமின்றி உடனடி குடிநீர் இணைப்பு
By DIN | Published On : 24th June 2019 08:39 AM | Last Updated : 24th June 2019 08:39 AM | அ+அ அ- |

அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் மக்கள் வசிக்கும் அனைத்து கட்டடங்களுக்கும் கட்டணம் வசூலிக்காமல் குடிநீர் குழாய் இணைப்பு உடனடியாக வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் இரா.வினோத் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு அண்மையில் எடுத்த கொள்கை முடிவின்படி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு எந்தவொரு கட்டணமும் வசூலிக்காமல் உடனடியாக வழங்கப்படும். பின்னர் மேற்படி இணைப்பிற்கான கட்டணம், மேற்பார்வை கட்டணம், வைப்புத் தொகை ஆகியவை கணக்கிடப்பட்டு மொத்தமாக அந்தந்த குடிநீர் குழாய் இணைப்புதாரர்களின் சொத்துவரி தொகையுடன் 10 சம தவணைகளாக வசூலிக்கப்படும் என்ற விபரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
குடிநீர் குழாய் இணைப்புகள் முற்றிலும் இலவசம் என்று கருதக் கூடாது அல்லது இணைப்பு வழங்கிட தொகை தாருங்கள் என வெளிநபர்கள் யாரேனும் கோரினால் கொடுக்க வேண்டாம். மேலும் இணைப்பு கோரும் கட்டடத்தின் உரிமையாளர்கள், சொத்துவரி ரசீது நகலுடன் வந்து நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.