ஊரக அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தமிழக அரசின் விருதுகள்: ஆட்சியர் தகவல்

தமிழக அரசின் சார்பில் சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 

தமிழக அரசின் சார்பில் சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரிவெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரு சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு 2018-19-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தலா ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் பரிசுத் தொகையாகவும்,  இதர செலவினங்களுக்காக ரூ.1.30 லட்சம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தை உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அறிவியல் நகரம் செயல்படுத்தும்.
உலகளாவிய வேளாண் உணவு முறைகளுக்கு உள்ள எதிர்காலச் சவால்கள் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றச் சூழலை எதிர்கொள்ளுதல்,  கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்தல், மண் பாழ்படுவதை எதிர்கொள்ளுதல், பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் மரபுவழி தொழில்நுட்ப அறிவு அடிப்படையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
இத்தகைய கண்டுபிடிப்புகள் சமூகப் பார்வைக்குத் தெரியாமல் மறைந்து போவதை தடுத்து இத்தகைய கண்டுபிடிப்புகளை உரிய முறையில் அங்கீகரித்திடவே இந்த பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இத்தகைய விருதுகளைப் பெற ஒருவர் மரபு வழியான தொழில்நுட்ப அறிவாற்றலோடு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் உடையவராகவும்,  கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளைச் சார்ந்தவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. 
இத்தகைய புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர்களும், காப்புரிமைக்கு விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். கண்டுபிடிப்பு 5 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கக் கூடாது.
கண்டுபிடிப்பாளர்கள் தமிழக அரசின் விருதைப் பெற தங்களின் விண்ணப்பத்தை அறிவியல் நகரம், காந்தி மண்டபம் சாலை, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகம், சென்னை-25 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி-w‌w‌w.‌s​c‌i‌e‌n​c‌e​c‌i‌t‌y​c‌h‌e‌n‌n​a‌i.‌i‌n. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com