பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: போராட்டத்தின்போது மாணவர்கள் - போலீஸார் தள்ளுமுள்ளு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் இரண்டாம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தியபோது, அங்கிருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலரை போலீஸார் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
மாணவர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் அதிரடிப்படை வாகனத்தில் ஏற்றியபோது மாணவிகள் வாகனத்தைச் சுற்றி அமர்ந்து மறியலில் ஈடுபட்டு அவர்களை விடுவிக்கச் செய்தனர்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையிலும் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாக மாணவிகள் வெளியே வந்து வாயிலில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
பொள்ளாச்சி சம்பவத்தில் அனைத்துக் குற்றவாளிகளையும் கைது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், நகரக் காவல் ஆய்வாளர் பர வாசுதேவன் உள்ளிட்டோர் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகளுடன் மாணவர்கள் சிலரும் இருப்பதைக் கண்ட போலீஸார் அவர்களை விசாரித்தனர். இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் எனத் தெரிவித்தபோது, மாணவிகள் கல்லூரியில் நீங்களெல்லாம் யார் என போலீஸார் கேட்டதால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நேரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர் அரவிந்தசாமி உள்ளிட்ட 5 பேரை போலீஸார் வலுக்கட்டாயமாக  அதிரடிப்படை வாகனத்தில் ஏற்றினர். 
இதைத் தொடர்ந்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவிகள் அனைவரும் சாலைக்கு வந்து போலீஸ் வாகனத்தை எடுக்க முடியாத அளவுக்கு சுற்றி அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் வேறு வழியின்றி வாகனத்தில் ஏற்றிய 5 பேரையும் கீழே இறக்கி விட்டனர். சிறிதுநேரத்தில் போராட்டம் நடத்திய அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இன்று முற்றுகைப் போராட்டம்: இந்நிலையில் இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலர் அரவிந்தசாமியைத் தாக்கிய காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 
இதற்கிடையே தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் அரவிந்தசாமி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com