கந்தர்வகோட்டை அரசுப் பேருந்து பணிமனையில் பாம்பு கடித்து நடத்துநர் பலி
By DIN | Published On : 01st May 2019 08:31 AM | Last Updated : 01st May 2019 08:31 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்து நடத்துநர் பாம்பு கடித்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழ வஸ்தாசாவடியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் புண்ணியமூர்த்தி(31). இவர் அரசு போக்குவரத்துக் கழகம் கந்தர்வகோட்டை கிளையில் நடத்துநராகப் பணியாற்றி வருகின்றார். இவர் வழக்கம்போல் பணி முடிந்து திங்கள்கிழமை இரவு கந்தர்வகோட்டை அரசு பணிமனையில் தங்கியுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளியலறைக்குச் சென்றபோது, அவரைப் பாம்பு கடித்துள்ளது. இவரது கூச்சலை கேட்ட மற்ற பணியாளர்கள், அவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, மேல் சிகிச்சைக்கு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.