மண் மாதிரி சேகரிப்புக்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவி மூலம் நிலங்கள் அடையாளமிடப்பட்டு அனைத்து வருவாய் கிராமங்களிலும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவி மூலம் நிலங்கள் அடையாளமிடப்பட்டு அனைத்து வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ். சுப்பையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யப்பட்ட மண் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து மதிப்பிடும் வகையில்  அனைத்து வட்டாரங்களில்  மண் வளத்தையும் மண் அடுக்குகளையும் ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தி அடையாளப்படுத்தி, மண்ணின் மேல்  பரப்பில் 10 இடங்களிலும் மண் அடுக்குகளில் 6 மாதிரிகளும் எடுத்து மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் மண்ணில் உள்ள பேரூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள்  மற்றும் அந்தந்த கிராமங்களின் மண்ணின் அறிவியல் தன்மையை அறிந்து கொள்ளவும்  வாய்ப்புள்ளது. ஆழமாக உள்ள மண்ணை ஆய்வு செய்வதன் மூலம் சுண்ணாம்பு போன்ற தீங்கு விளைவிக்கும் மண் வகைகளைக் கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் பயிர் வகைகளை பயிர் செய்யலாம்.  மண்ணின் ஆழத்தைப் பொருத்து ஆழமான வேர்கள் கொண்ட பயிர்களை அந்தப் பகுதியில் நடவு செய்வதைத் தவிர்க்கவும் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.  இந்நிலையில் மாவட்டத்தில் நிகழாண்டு சுமார் 11,500 மண் மாதிரிகள் சேகரித்து மண் ஆய்வு செய்யப்படவுள்ளது. அதற்கான மண் சேகரிக்கும் பணிகள் அனைத்து வருவாய் கிராமங்களிலும் வேளாண் அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மண் பரிசோதனை முடிவுகளின்படி பயிர்களுக்கு உரம் இடுவதன் மூலம் அதிக உரம் பயன்படுத்துவதைக் குறைக்கவும், பயிர் சாகுபடி செலவைக் குறைக்கவும் மண் மாதிரி ஆய்வுகள் பயன் தரும்.
எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் வேளாண்மை அலுவலர்களுடன்  மண் மாதிரி சேகரிக்கும் பணிகளில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com