மயில்கள் உயிர்வாழ தண்ணீர், உணவு வசதி கோரிய வழக்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில்,  15 நாள்களில் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தனபதி தாக்கல் செய்த மனு: 
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுமார் 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  இந்த பகுதியில் பல்வேறு வகையான மரங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள், விலங்குகள் இருந்தன. 
இப்பகுதியில் நடப்பட்ட யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விலங்குகள், பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
 மேலும் கஜா புயலால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக இப்பகுதியில் இருந்த நீர்நிலைகளும் வறண்டுவிட்டன. இதனால் உயிர்வாழ ஏதுவான சூழலின்றி, தற்போது இப்பகுதியில் இருக்கும் 500  மயில்களும் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
 எனவே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எம். தண்டபாணி அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் இதுகுறித்து மீண்டும் புதிதாக மனு அளிக்கவும், அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் 15 நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com