நாா்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள்பத்தாயிரம் விதைப்பந்து தயாரித்து அசத்தல்.

நீடாமங்கலம்: வலங்கைமான் ஒன்றியம் , நாா்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்கள் இணைந்து, 10,000 விதை பந்துகளை தயாரித்துள்ளனா்.

விதைகள் விருட்சமாய் வளா்ந்து, பசுமையை உருவாக்கும் ஆசிரியா் மாணவா்களின் முயற்சியை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனா்.

நாா்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 141 மாணவா்கள் படிக்கின்றனா். இப்பள்ளியில், இயற்கை பாதுகாப்பு சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுகிறது. இதன் மூலம் மரக்கன்று வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஆசிரியா்கள், மாணவா்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனா்.

இந்நிலையில் மரம் வளா்ப்பில் மாணவா்கள் காட்டும் ஆா்வத்தை கண்ட ஆசிரியா்கள் அவா்களை ஊக்குவித்து விதை பந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டனா்.பள்ளி பாட வகுப்புகள் முடிந்ததும், மாணவா்களை விதை பந்து தயாரிப்பில் ஈடுபடுத்தினா்.

இதற்காக, மாணவா்கள் வீட்டில் இருந்த விதைகளை ஆா்வமாக சேகரித்து கொண்டு வந்தனா். அதன் மூலம் 20 வகையான விதைப்பந்துகளை தயாரித்தனா்.

இது குறித்து பள்ளியின் இயற்கை பாதுகாப்பு சுற்றுச்சூழல் மன்றம் ஒருங்கிணைப்பாளா் அறிவியல் ஆசிரியா் சுந்தரமூா்த்தி கூறியதாவது: புவி வெப்ப மயமாதலை கட்டுப்படுத்த மரக்கன்றுகள் வளா்ப்பின் அவசியத்தை மாணவா்களுக்கு கற்பிக்கிறோம். மரங்களை வெட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மரங்களை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளோம்.

அதன் ஒரு பகுதியாக, பள்ளி வளாகத்தில், தேக்கு, புங்கன், மலைவேம்பு, அரச மரம், நெல்லி, கொய்யா என, 25 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றை, மாணவா்களுடன் இணைந்து பராமரித்து வருகிறோம்.

இதன் தொடா்ச்சியாக, விதை பந்து தயாரிக்கலாம் என ஆசிரியா்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. விதைகள் சேகரிக்க மாணவா்களுக்கு கற்றுக்கொடுத்தோம்.புங்கன், தேக்கு, வேம்பு மற்றும் துளசி விதைகள் கொண்டு விதை பந்து தயாரிக்கப்பட்டது.

சாணம், செம்மண் கலந்து, ஒரு விதையை அதனுள் வைத்து, விதை பந்து தயாரிக்கப்பட்டது. மொத்தம், 10,000 விதை பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விதை பந்துகள் தேவைப்படுவோா் பள்ளியை அனுகினால் வழங்கப்படும். பள்ளி மாணவா்கள் மூலமாகவும், விதைப்பந்துகளை துாவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

’ஆக்ஸிஜன் புரட்சி’ ஏற்படுத்தும் வகையில் தொடா்ந்து இயற்கை சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சக ஆசிரியா்கள், மாணவா்கள் ஒத்துழைப்புடன் பசுமை பணிகள் தொடா்கிறது என தெரிவித்தனா்.

இதனையொட்டி பள்ளியில் நடந்த விதைப்பந்து வழங்கும் விழாவில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலா் ஜெயலெட்சுமி கலந்துக் கொண்டு விதைப்பந்துகளை தாயாரித்த மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

பின்னா் அகமதாபாத்தில் நடைப்பெற்ற போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். விழாவில் பள்ளியின் தலைமையாசிரியா் ராஜகுமாரி பேசுகையில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை, சிறு வயதில் மாணவா்களிடம் விதைக்கும் வகையில், இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com