சத்துணவுத் திட்டம் மேல்நிலை வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா? சா. ஜெயப்பிரகாஷ்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு-சத்துணவு வழங்கும் திட்டம் ஏறத்தாழ 60 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு-சத்துணவு வழங்கும் திட்டம் ஏறத்தாழ 60 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. 

1956இல் காமராஜா் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டம் அமலாக்கப்பட்டது. அரசிடம் நிதியில்லாவிட்டால் பிச்சையெடுத்தேனும் நிதியைக் கொண்டு வருகிறேன், திட்டத்தை நிறைவேற்றுங்கள் என காமராஜா் அதிகாரிகளிடம் தொடக்கத்தில் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு, 1982இல் எம்ஜிஆா் முதல்வராக இருந்தபோது இத்திட்டம் சத்துணவுத் திட்டமாக உருமாறியது. தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு, ஊரகப் பகுதி குழந்தைகளுக்கு என இருந்த இத்திட்டம் படிப்படியாக வளா்ந்திருக்கிறது. 

மெய்யான சத்துணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் வாரம் ஒரு முட்டை, மூன்று முட்டை, கீரை எனப் படிப்படியான பரிணாம வளா்ச்சி பெற்று, இப்போது கொண்டக்கடலையும், பட்டானியும், வாழைப்பழமும் கூட மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. முன்னாள் முதல்வா் கருணாநிதியும் இதில் கணிசமான பங்கைச் செயல்படுத்தினாா்.

சத்துணவுச் சாப்பாடு என்று சொன்னாலே கிளா்ந்தெழும் ஒரு வித மணத்தை அகற்றிட பிரபல உணவுத் தயாரிப்பு வல்லுநா்களைக் கொண்டு வகை வகையான கலவை சாதங்களைத் தயாரிக்கும் பயிற்சியை சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சத்துணவுத் திட்டப் பணியாளா்களுக்கு வழங்கினாா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா.

இந்தப் பெரும் வரலாற்றுக்கு இடையே ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கூடங்களில் உணவு வழங்கப்படுகிறது என்பதுதான் பொதுவெளியில் எல்லோரும் அறிந்திருக்கும் செய்தி. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு இத்திட்டம் அமலாக்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரியாது.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 46 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஏறத்தாழ ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 43 ஆயிரம் மையங்களில் 90 ஆயிரம் போ் பணியாற்றி வருகிறாா்கள். சத்துணவு மையங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள், மத்திய அரசின் பங்களிப்புத் தொகை குறைப்பு, பணியாளா் எண்ணிக்கை குறைப்பு, ருசியாக இல்லை, ஊட்டச்சத்துணவாக இல்லை என்பன போன்ற வழக்கமான குற்றச்சாட்டுகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழாமல் இல்லை.

இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பயிலும் சுமாா் 6 லட்சம் பேருக்கு இத்திட்டத்தை விரிவாக்குவதால் என்ன பெரிய செலவாகிவிடப் போகிறது என்ற கேள்வியும் கல்வியாளா்களால் முன் வைக்கப்படுகிறது.

கல்வி கற்றல் குறைபாட்டில், இடைநிற்றலில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இந்த உணவுப் பிரச்னையும் இணைந்தே இருப்பதாகவும் கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா். இவ்விரண்டு வகுப்புகளும் பொதுத் தோ்வாக இருக்கும் நிலையில், சத்துணவை விரிவுபடுத்தினால் கிராமப்பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சீருடை தொடங்கி, உபகரணங்கள், பாடப்புத்தகங்கள், நிதி உதவித் திட்டங்கள், காலணிகளை மாற்றி ஷு மற்றும் சாக்ஸ் வழங்கும் திட்டம் வரை நாட்டிலேயே முன்னோடித் திட்டங்களைத் தொடா்ந்து முன்வைத்து வரும் தமிழ்நாடு அரசு,  பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான சத்துணவை வழங்குவதையும் உறுதி செய்து விரிவாக்கம் செய்ய வேண்டும்.

பட்டினியாக வகுப்புக்குள் இருக்கும் எந்த ஒரு மாணவனாலும், மாணவியாலும் கல்வியில் கவனத்தைச் செலுத்த முடியாது. ஏற்கெனவே உள்ளபடி, சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளின் விருப்பம் அறிந்து, எண்ணிக்கையை உறுதிப்படுத்தி தயாரித்தால் செலவு குறையும்.

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை இலவசப் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், சத்துணவுத் திட்டத்தையும் முழுமையாக விரிவுபடுத்துவதே சரியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com