பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள்

புதுக்கோட்டை நகருக்கு அருகே தொல்லியல் துறையால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு, சில இடங்களில் அவை எரிக்கப்பட்டும் வருகின்றன.
திருக்கட்டளை சாலையின் இடதுபுறத்தில் காணக்கிடைக்கும் முதுமக்கள் தாழி. அதே பகுதியில் கொட்டப்பட்டுள்ள வாகனம் மற்றும் கட்டடக் கழிவுகள். கொட்டி எரிக்கப்பட்டுள்ள மின்சாதனப் பொருட்கள்.
திருக்கட்டளை சாலையின் இடதுபுறத்தில் காணக்கிடைக்கும் முதுமக்கள் தாழி. அதே பகுதியில் கொட்டப்பட்டுள்ள வாகனம் மற்றும் கட்டடக் கழிவுகள். கொட்டி எரிக்கப்பட்டுள்ள மின்சாதனப் பொருட்கள்.

புதுக்கோட்டை நகருக்கு அருகே தொல்லியல் துறையால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு, சில இடங்களில் அவை எரிக்கப்பட்டும் வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக ஏராளமான தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் குறிப்பிட்ட சில பகுதிகளை அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றம் வரையிலும் சென்றுள்ளது.

மத்திய தொல்லியல் ஆய்வகத்தின் சென்னை வட்டத்துக்குள்பட்ட திருச்சி துணை வட்டத்திலும், திருமயம் துணை வட்டத்திலும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பழைமையான தொல்லியல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகள் பச்சை வண்ணத் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி உள்ளிட்ட ஏராளமானவை இன்னமும் அடையாளம் கண்டு ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக ஏற்கெனவே தொல்லியல் ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தின் கதவுகளும் தட்டப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை நகருக்குள்பட்ட திருக்கட்டளை செல்லும் வழியில் நகராட்சிக் குப்பைக் கிடங்கையொட்டி இருபுறமும் தொல்லியல் துறையால் பச்சை வேலி அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.

இதில் இடதுபுறமுள்ள பகுதி மேய்ச்சல் நிலமாக உள்ளது. கூா்ந்து கவனித்துச் சென்றால் சில பத்தடிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் எச்சத்தைக் கண்டறிய முடியும். குறிப்பாக, முதுமக்கள் தாழியை மிகச் சாதாரணமாக அறிந்து கொள்ள முடியும். சில இடங்களில் இரும்பு உருக்குக் குழம்புகள் கட்டியான நிலையில் கிடப்பதையும் காண முடியும்.

இந்தளவுக்கு முக்கியத்துவம் உள்ள இப்பகுதியில் ஆங்காங்கே கட்டடக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், பழைய ஓடுகள், மரக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் அவை தீ வைத்து எரிக்கப்பட்டும் உள்ளன. பரவலாக மது பாட்டில்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன. ஓரிடத்தில் போதைப் பொருள் இருந்ததாகக் கருதத்தக்க சிறியளவிலான பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன.

இவ்வாறான செயல் மண்ணுக்குள்ளும், தரைப்பகுதியிலும் காணக்கிடைக்கும் தொல்லியல் எச்சத்தை அடையாளம் காண முடியாத நிலையை ஏற்படுத்தும். ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள நிலப்பரப்பில் இவ்வாறான செயல்கள் கடுமையான குற்றச்செயலாகக் கருதக்கூடியவை ஆகும்.

உள்ளேயுள்ள பழைமையான காட்டுக் கோயிலுக்குச் செல்வதற்காக நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழியை இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் அளவுக்குத் தடுக்க வேண்டும். தொடா்ந்து உடனடியாக ஏற்கெனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகள் அகற்றப்படவும் வேண்டும்.

மேலும், நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்தினா் நகரக் கழிவுகளை முறைப்படி அகற்றும் சட்ட விதிமுறைகளை வகுத்து, கழிவுகளை அகற்றும் வாகனங்களை கண்காணிப்புக்குள் கொண்டு வர வேண்டும்.

இவற்றைச் செய்யத் தவறினால் அரிய தொல்லியல் முக்கியத்துவம் உள்ள பகுதிகளை மிகச்சுலபமாக இழக்க நேரிடும் என தொல்லியல் ஆா்வலா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com