கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: 50,000 பேர் பங்கேற்பு

பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு

பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருத்தலங்களுள் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். கொன்னை மரத்தடியில் சுயம்புவாய் இங்குள்ள முத்துமாரியம்மன் தோன்றியதால் கொன்னையூர் என இந்த ஊர் பெயர் பெற்றது. கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்மலர் சாத்தியும், வயிறு, கை, கால் நோயால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலில் உள்ள இயந்திரத்தை சாத்தியும் வழிபட்டால் உடல்நலம் சீராகும் என்பது ஐதீகமாகும்.
இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில், விநாயகர், முத்துசுப்பிரமணியர், பனையடிகருப்பர், பைரவர், வீரபத்திரர், ஆஞ்சநேயர், நாகர் போன்ற சன்னதிகளுடன் மகாமண்டபம் மற்றும் விமான கோபுரங்களுக்கான திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றதையடுத்து, குடமுழுக்கு விழா நடத்த விழாக்குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. 
குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி பூஜைகளுடன் முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜைகளும், சனிக்கிழமை விக்னேஸ்வரபூஜை, புண்யயாகம் வேதபாராயணம் மற்றும் நான்காம், ஐந்தாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. 
புனித நீருடன் குடமுழுக்கு விழா: ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் ஆறாம் கால யாகபூஜைகள் நடைபெற்று, 8.30 மணியளவில் யாத்ராதானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. 9.45 மணியளவில், விமானம், ராஜ கோபுரம், மூலவர் முத்துமாரியம்மன் மீது, பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்ற குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது. அப்போது, ஆகாயத்தில் கருடர் வலம் வந்தது. தொடர்ந்து தீபாராதனை, மஹா அபிஷேகம் நடைபெற்றது.  
கபிலர்மலை ஜி.செல்வகபில சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சர்வசாதகம் செய்திருந்தனர். 
விழாவில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு: குடமுழுக்கு விழாவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்அர.சுதர்சன், புதுக்கோட்டை உதவி ஆணையர் சோ.பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், நிலவள வங்கித்தலைவர் ராம.பழனியாண்டி, கொப்பனாபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.மாரிமுத்து, தொழிலதிபர் கார்த்திகேயன், பொறியாளர் விஎன்ஆர். நாகராஜன் உள்பட முக்கிய பிரமுகர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. காரையூர் வட்டார  அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.  
விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் மு.பழ. முத்துக்கருப்பன், செயலர் ராம.ராஜா, பொருளர் ராக.செல்வம், கோயில் செயல் அலுவலர் அழ.வைரவன், ஆய்வாளர் நா.ராஜேஸ்வரி  மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com