"படித்ததை எடுத்துரைக்கும் ஆற்றல் அவசியம்'

தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தினாலும்கூட புதுக்கோட்டை ரயில் நிலையம் இன்னமும் அடிப்படை வசதிகளின்றிப் பரிதாபமாகத்தான் காட்சியளிக்கிறது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தினாலும்கூட புதுக்கோட்டை ரயில் நிலையம் இன்னமும் அடிப்படை வசதிகளின்றிப் பரிதாபமாகத்தான் காட்சியளிக்கிறது.
புதுக்கோட்டை ரயில் நிலையம் 1920-இல் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டையிலிருந்து ராமேசுவரம், காரைக்குடி, செங்கோட்டை, மானாமதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, சென்னை, திருச்சி, புதுச்சேரி, கோவை, புவனேஸ்வர், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாண்டுயாதி வரைக்கும் நேரடி ரயில்கள் உண்டு. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். புதன்கிழமை காலை பல்லவன் ரயிலில் மட்டும் புதுக்கோட்டையிலிருந்து 210 பேர் ரயில் ஏறியுள்ளனர் என்பதுதான் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தப்படும் பயணிகளின் எண்ணிக்கைக்கு நேரடிச்சான்று.
இத்தனை முக்கியத்துவம் பெற்ற புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளுக்கு பஞ்சம் ஏராளம். இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான நிறுத்தும் இடம் இல்லை. வெட்டவெளியில்  வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. 
பயணிகள் அவசரத் தேவைக்கு வசதியாக ரயில் நிலைய முகப்பின் இடதுபுறம் கட்டப்பட்டுள்ள இரு ஏடிஎம் மையங்களுக்கான சிறிய கட்டடம் இன்னும் திறக்கப்படவே இல்லை. ரயில் நிலையத்துக்குள் மூடப்பட்டே கிடக்கிறது சிற்றுண்டியகம். அதேபோல அருகிலுள்ள கழிப்பறையும் மூடிய நிலைதான் (மாற்றுத் திறனாளிகளுக்கான தனிக் கழிப்பறையும்). 
மூன்று நடைமேடைகள் இருந்தும் நடைமேடைகளில் வெயில், மழையில் இருந்து ஒதுங்கி நிற்க அமைக்கப்படும் நிழற்குடைகளும் மிகக் குறைந்த அளவே அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் நல்வாய்ப்பாக கஜாவுக்குப் பிறகு புதிய நிழற்குடைகள் பளிச்சிடுகின்றன. பெரும்பரப்பு வெட்டவெளியாகவே இருக்கிறது. ரயில் பெட்டிகள் நிற்குமிடங்களை முன்கூட்டியே கணிக்கும் வசதியும் கிடையாது.  அவசரத்துக்கு தண்ணீர் கிடைக்காது. நடைமேடைகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாய்கள் உடைந்து காணப்படுகின்றன. ஒரேயொரு இடத்தில் கறுப்பு சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இரவு நேரங்களில் நடைமேடைகளில் போதிய வெளிச்சம் இல்லை. இதுதான் புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் அவலநிலை. 
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலர் இப்ராஹிம் பாபு கூறியது: 
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பல முறை புகார் மனுக்களாக அளித்துள்ளோம். அண்மையில் கூட, திருச்சியில் நடைபெற்ற எம்பிக்கள் பங்கேற்ற கூட்டத்திலும் விரிவான மனு அளிக்கப்பட்டுள்ளது. 
திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் வழியாகவும் ரயில்வே துறைக்கு அண்மையில் கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான பயணிகள் பயன்படுத்தும் அவலத்தை சீரமைக்க ரயில்வே துறை விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோரிக்கைகளை படிப்படியாகவாவது நிறைவேற்றாவிட்டால் ஒரு நாள் திடீரென பயணிகளைத் திரட்டி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் இப்ராஹிம் பாபு.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திருச்சி சு. திருநாவுக்கரசர், ராமநாதபுரம் நவாஸ்கனி, சிவகங்கை கார்த்தி சிதம்பரம், கரூர் எஸ். ஜோதிமணி என நான்கு மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள். இவர்களோடு மாநில அமைச்சராக சி. விஜயபாஸ்கர் உள்ளார்.  இவர்கள் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு நல்விடிவைத் தேடித் தருவார்களா?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com