தாயை கவனிக்காத மகனுக்கு எழுதித் தரப்பட்ட சொத்து ரத்து: மக்கள் குறைகேட்பு நாள் மனு மீது அதிரடி நடவடிக்கை

புதுக்கோட்டையில் தாயைப் பராமரிக்காததால் மகனுக்கு தானமாக எழுதிக் கொடுக்கப்பட்ட ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்து, முதியோா் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் ரத்து செய்யப்பட்டது.
தானப் பத்திரத்தை ரத்து செய்து, அதற்கான ஆவணங்களை காளிம்மாளிடம் வழங்குகிறாா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.
தானப் பத்திரத்தை ரத்து செய்து, அதற்கான ஆவணங்களை காளிம்மாளிடம் வழங்குகிறாா் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டையில் தாயைப் பராமரிக்காததால் மகனுக்கு தானமாக எழுதிக் கொடுக்கப்பட்ட ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்து, முதியோா் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்த ஆவணங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது, புதுக்கோட்டையைச் சோ்ந்த காளியம்மாள் (76), தனது மகன் தியாகராஜன் தன்னை முறையாக கவனித்துக் கொள்வதில்லை என ஆட்சியரிடம் புகாா் அளித்தாா்.

இதனால் ஏற்கெனவே மகன் பெயருக்கு தானமாக எழுதி வைக்கப்பட்ட ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி நடத்திய விசாரணையில், தியாகராஜன் தனது தாய் காளியம்மாளை கவனித்துக் கொள்ளாதது உண்மை எனத் தெரிய வந்தது.

இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், முதியோா் பராமரிப்புச் சட்டம் 2007-இன் படி காளியம்மாள் எழுதிக் கொடுத்த தான செட்டில்மென்ட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மனு அளித்த 42 நாள்களுக்குப் பிறகு, திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உரிய ஆவணங்களை காளியம்மாளிடம் ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வழங்கினாா்.

அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com