20 நாளே ஆன குழந்தையின் காலில் இருந்த ரத்தநாளக் கட்டி அகற்றம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 20 நாளே ஆன குழந்தைக்கு காலில் இருந்த ரத்தக் கட்டியை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.
குழந்தையின் காலில் இருந்து அகற்றப்பட்ட கட்டி.
குழந்தையின் காலில் இருந்து அகற்றப்பட்ட கட்டி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 20 நாளே ஆன குழந்தைக்கு காலில் இருந்த ரத்தக் கட்டியை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி புவனேஸ்வரி. இவருக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அண்மையில் (ஜூன் 8) பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிறக்கும்போதே வலது முழங்கால் பகுதியில் ரத்தக்கட்டி இருந்தது. இதைத்தொடா்ந்து, குழந்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நுண்கதிா் மருத்துவா் ஸ்டாலின், இருதய நோய் நிபுணா் நாச்சியப்பன், மயக்க மருத்துவ தலைமை மருத்துவா் சாய்பிரபா, குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணா் பாலசுப்ரமணியம், தலைமை குழந்தை மருத்துவா் இங்கா்சால், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணா் வெங்கடசுப்ரமனியன் ஆகியோா் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

தொடா்ந்து, குழந்தைக்கு சி.டி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்த பின்னா் ஜூன் 18 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமாா் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவக் குழுவினா்

பெரிய அளவிலான ரத்தநாள கட்டியை அகற்றினா். குழந்தைக்கு ஒட்டு போடாமல் ‘ராம்பாய்டு ஃபிளாப்‘ என்ற நவீன முறையில் அந்த இடத்தில் இருந்த தோல் பகுதியை சீரமைத்தனா்.

இதுகுறித்து புதுகை அரசு மருத்துவக்கல்லூரி டீன் அழ. மீனாட்சி சுந்தரம் மேலும் கூறியது:

‘ஹீமாஞ்சியோமா’ என்று சொல்லக்கூடிய குறைபாட்டில் ரத்தக் குழாயை உருவாக்கும் திசுக்கள் தோல், தோலின் அடிப்பகுதியில் கருவிலேயே புகுந்து விடுவதால் ரத்தநாளங்கள் ஒரு முடிச்சாக உருவாகி கட்டியாக மாறிவிடும். தனியாா் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சம் வரை செலவாகக் கூடிய இந்தச் சிகிச்சைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com