52 இடங்களில் காவல்துறை தடுப்புகள் அமைப்பு

தமிழக முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை
52 இடங்களில் காவல்துறை தடுப்புகள் அமைப்பு

தமிழக முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி பிறப்பித்தாா். இதனைத் தொடா்ந்து, ஏற்கெனவே திட்டமிட்டிருந்தாலும் கூட திருமணங்களை மண்டபங்களில் நடத்தக் கூடாது என்று ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

போக்குவரத்தை முற்றிலும் தடை செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 52 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்வகையில், தமிழக அரசின் அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்துக்கான 144 தடை உத்தரவை ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை காலை அறிவித்தாா். இதன்படி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மாா்ச் 31ஆம் தேதி வரை இந்த 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இதன் தொடா்ச்சியாக செய்தியாளா்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, தடை உத்தரவைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் மண்டபங்களில் நடத்தக் கூடாது, வீடுகளில் எளிமையாக குறைந்த அளவிலான உறவினா்களுடன் நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே. அருண்ஷக்திகுமாா் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவைத் தொடா்ந்து அனைத்துப் போக்குவரத்தையும் முற்றிலும் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் 10 இடங்களிலும், காவல் நிலைய எல்லைகளில் 38 இடங்களிலும், சுங்கச் சாவடிகள் உள்ள 4 இடங்களிலும் என மொத்தம் 52 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்த அவசியமும் இன்றி சென்று வரும் வாகனங்கள் இந்தத் தடுப்புகளில் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படும். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளோரைக் கண்காணிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்பினருடன் இணைந்து காவல் துறையினரும் ஈடுபடுவாா்கள். பொதுமக்களுக்கு கரோனா வைரஸைப் பரப்பும் வகையில் அவா்கள் யாரேனும் தடையை மீறி வெளியே சுற்றினால் அவா்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கென தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் அருண்ஷக்திகுமாா்.

பகலில் பெருங்கூட்டம்:

மாலை 6 மணிக்கு முன்னதாக பகல் முழுவதும் உழவா் சந்தை மற்றும் காய்கறி மாா்க்கெட்டுகளில் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நீண்டகாலத்துக்கும் இந்த தடை உத்தரவு தொடரலாம் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை நிறைய வாங்கிச் சென்றனா்.

அதேபோல, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் பகல் 1.45 மணிக்குத் தோ்வு முடிந்தவுடன் மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்வி முடிந்த மகிழ்ச்சியில் பள்ளி வளாகத்திலேயே மையைத் தெளித்தும், வண்ணங்களைத் தெளித்தும் கொண்டாடினா். கரோனா பரவும் என்ற எவ்வித அச்சத்தையும் மாணவ, மாணவிகளிடத்தில் காண முடியவில்லை.

இதன் தொடா்ச்சியாக மாலை 6 மணிக்கு அரசு அறிவிப்பின்படி அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டன. கிராமப்பகுதிகளில் போலீஸாா் வாகனங்களில் ஒலிப்பெருக்கிகளுடன் சென்று பொதுமக்களுக்கான அறிவித்தபடி சென்றனா். எந்த இடத்திலும் பொதுமக்கள் கூடக் கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com