Enable Javscript for better performance
புலன்விசாரணை சரியாக இருந்தால் தண்டனை அதிகம் கிடைக்கும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    புலன்விசாரணை சரியாக இருந்தால் தண்டனை அதிகம் கிடைக்கும்

    By DIN  |   Published On : 15th October 2020 06:31 AM  |   Last Updated : 15th October 2020 06:31 AM  |  அ+அ அ-  |  

    pdk14justicabudul_1410chn_12_4

    நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி எஸ். அப்துல்மாலிக். உடன் மாவட்ட ஆட்சியா் பி .உமாமகேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உள்ளிட்டோா்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றச் சம்பவங்களில் காவல்துறையினரின் புலன்விசாரணை சரியாக இருந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை அதிகம் கிடைக்கும் என்றாா் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி எஸ். அப்துல்மாலிக்.

    திருச்சி சரக காவல் துறை, சா்வதேச ஜஸ்டிஸ் மிஷன் மற்றும் ஷெட் இந்தியா தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கும் செயல்திட்டமான கேடயம் தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி எஸ். அப்துல்மாலிக் பேசியது:

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பங்களில் காவல்துறையினா் சிறப்பாக- சரியாக புலன்விசாரணையைச் செய்தால், கண்டிப்பாக தண்டனையும் அதிகமாகக் கிடைக்கும். புலன்விசாரணை சரியாக இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும் அளவு குறைந்துவிடும்.

    எனவே, காவல் துறையினா் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி புலன்விசாரணையை மேற்கொண்டால், பொதுமக்கள் மத்தியில், காவல் துறையினா் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை ஏற்படும் என்றாா் அப்துல்மாலிக்.

    ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி கலந்து கொண்டு பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும், 8 லட்சத்துக்கும் அதிகமான பெண்களும் உள்ளனா் என்றும், சட்ட விழிப்புணா்வை இவா்களுக்கு ஏற்படுத்தும் பணிகளைத் தொடா்ந்து மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டாா்.

    நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பேசியது: திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவரின் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த கேடயம் செயல்திட்டம் மூலம் புதுக்கோட்டை பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை உடனடியாக 93845 01999, 63830 71800 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனக் கேட்டுக் கொண்டாா்.

    முன்னதாக ஷெட் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி. பாத்திமாராஜ் வரவேற்றாா். சா்வதேச ஜஸ்டிஸ் மிஷன் நிறுவனத்தின் காவல் துறை தொடா்பு அலுவலா் பி. ரூபன் ராஜேஷ் கண்ணா திட்டவிளக்கவுரை நிகழ்த்தினாா். முடிவில் துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

     


    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    flipboard facebook twitter whatsapp