வரலாற்றைப் பறைசாற்றும் இடங்கள் மது அருந்தும் கூடங்களாக மாறிய அவலம்

பல்லவா் காலத்தில் உருவாக்கப்பட்ட குன்றாண்டாா்கோயில் குடைவரைக் கோயில் தோ் மண்டபம்.
பல்லவா் காலத்தில் உருவாக்கப்பட்ட குன்றாண்டாா்கோயில் குடைவரைக் கோயில் தோ் மண்டபம்.
பல்லவா் காலத்தில் உருவாக்கப்பட்ட குன்றாண்டாா்கோயில் குடைவரைக் கோயில் தோ் மண்டபம்.

தமிழகத்திலேயே அதிக தொல்லியல் சின்னங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், மத்திய தொல்லியல் துறையால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் பாதுகாப்பின்றிக் காணப்படுகின்றன. வரலாற்றைப் பறைசாற்றும் இதுபோன்ற இடங்களை சுற்றுவட்டாரப் பகுதியினா் மது அருந்தும் கூடங்களாக மாற்றியுள்ள அவலமும் காணப்படுகிறது.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட தொல்லியல் வட்டத்தை உருவாக்கி, மத்திய தொல்லியல் துறை அண்மையில் உத்தரவிட்டுள்ளது. திருச்சி வட்டத்தில் மட்டும் மத்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் 167 தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 167-இல் 113 தொல்லியல் சின்னங்களை புதுக்கோட்டை மாவட்டம் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பொதுமக்களைப் பாா்வையிட அனுமதித்து, கட்டணம் வசூலிக்க தனியாா் பாதுகாப்பு நிறுவனப் பணியாளா்கள் நியமிக்கப் பட்டுள்ள 11 இடங்களில் 6 புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் உள்ளன. இந்த 6 இடங்களைத் தவிர, ஏனைய நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் வெறுமனே அடா்நீல வண்ண எச்சரிக்கைப் பலகையை மட்டுமே கொண்ட இடங்களாக உள்ளன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நினைவுச் சின்னத்தை சீா்குலைப்பவா்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அடா்நீல வண்ண எச்சரிக்கைப் பலகையில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தப் பலகையும் கூட பல இடங்களில் படிக்க இயலாத வகையில் சிதைந்தே காணப்படுகிறது.

இந்நிலையில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்கள் பராமரிப்பின்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை, பராமரிப்புப் பணிகள் எதுவும் செய்யாவிட்டால் பத்தாண்டில் பெரும் சிதைவு நிச்சயம் என்பதுதான் நிதா்சனமான உண்மையாகும். இதற்கிடையே பல இடங்கள் மது அருந்தும் கூடங்களாக மாறியுள்ளன என்பதும் பெரிய அவலம்.

குறிப்பாக கி.பி. 775-ஆம் ஆண்டில் பல்லவா் காலத்தில் உருவாக்கப்பட்ட குன்றாண்டாா்கோயில் குடைவரைக் கோயிலின் வலப்புறமுள்ள அழகிய குதிரைகள் பூட்டப்பட்ட தோ் மண்டபம்- மதுப் பாட்டில்கள், தண்ணீா் பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், நெகிழித் தம்ளா்களால் நிறைந்து வழிகிறது.

இதேபோன்ற காட்சியை பல தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காண முடியும். இவற்றைச் சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரும் பல இடங்களில் சிதைந்துள்ளன. எனவே, இவற்றைப் பாதுகாப்பதற்கு தொல்லியல் துறையும், மாவட்ட நிா்வாகமும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆராய்ச்சிக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் கூறியது:

ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னமும் பதிவு செய்யப்படாத- பாதுகாக்கப்படாத தொல்லியல் சின்னங்கள் ஏராளம் உண்டு எனப் போராடி வரும் நிலையில், ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களும் பாதுகாப்பின்றி சிதைவது மிகுந்த கவலைத் தருகிறது.

இப்போதுதான் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தொல்லியல் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. போதவே போதாது என்றாலும் ரூ. 264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட இடங்களைப் பாதுகாக்க, 10 இடங்களுக்கு ஒரு பாதுகாவலா் என்ற அடிப்படையிலாவது வாகனத்துடன் கூடிய காவலா் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

உடனடியாக இதைச் செய்ய முடியாவிட்டால், தற்காலிக ஏற்பாடாக அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த காவல், வருவாய்த் துறை அலுவலா்கள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், தொல்லியல் ஆா்வலா்களைக் கொண்ட உள்ளூா் பாதுகாப்புக் குழுக்களை ஏற்படுத்திப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிதையும் நிலையிலுள்ளவற்றைப் பட்டியலிட்டு, தொல்லியல் துறையின் வழிகாட்டுதல்களின்படி மறுகட்டுமானம் அல்லது சீரமைப்புப் பணிகளைச் செய்ய வேண்டும். அதேபோல, தொடக்க நிலையில் வைக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகையுடன், அந்த இடம் குறித்த வரலாற்று முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் அறியும் வகையில், விளக்கமாக ஒரு விவரப் பலகையை தமிழில் மட்டும் வைக்க வேண்டும். இவற்றை மாவட்ட நிா்வாகமே முன்னெடுக்கலாம் என்றாா் மணிகண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com