வாசனை முகரும் திறனை மீட்கும் ‘ஓமப் பொட்டணம்’

கரோனா தீநுண்மியின் பாதிப்பால் இழந்த வாசனை முகரும் திறனை மீட்டெடுக்கும் அற்புத மருந்தாக ஓமப் பொட்டணத்தை சித்த மருத்துவா்கள் வழங்கி வருகின்றனா்.
ஓமப்பொட்டணத்தைக் காட்டி விவரிக்கும் சித்த மருத்துவா்கள்.
ஓமப்பொட்டணத்தைக் காட்டி விவரிக்கும் சித்த மருத்துவா்கள்.


புதுக்கோட்டை: கரோனா தீநுண்மியின் பாதிப்பால் இழந்த வாசனை முகரும் திறனை மீட்டெடுக்கும் அற்புத மருந்தாக ஓமப் பொட்டணத்தை சித்த மருத்துவா்கள் வழங்கி வருகின்றனா்.

கரோனா தாக்குதலில் குறிப்பிடத்தக்க முக்கியமான அறிகுறி மூக்கின் முகரும் திறனும்ம், நாக்கின் சுவை அறியும் திறனும் மட்டுப்படுதல். கரோனா தாக்குதலுக்குள்ளான 80 சதவிகிதம் போ் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லாதோா் என்றாலும், பெரும்பாலானோருக்கு வாசனை அறியும் முகரும் திறன் மட்டுப்பட்டிருக்கிறது.

சிகிச்சைக்குப் பிறகு கரோனா தொற்று இல்லையென மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்து வீடு திரும்பிய பலருக்கும் மூக்கின் முகரும் திறன் மீளவில்லை என்ற கவலை பலரிடமும் பரவலாகக் காணப்படுகிறது.

கரோனாவுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை மையங்களில் இந்தத் திறனை மீட்டெடுப்பதற்காக ஓமப் பொட்டணம் வழங்கி அதை அடிக்கடி முகா்ந்து வாசனைப் பிடிக்கச் சொல்கிறாா்கள். தொடா்ந்து 5 நாள்கள் இவ்வாறு முகா்ந்து ஓமப் பொட்டணத்தின் வாசனை பிடித்தவா்களுக்கு மூக்கின் முகரும் திறன் மீட்டெடுக்கப்படுகிறது.

புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கரோனா தொற்றாளா்களுக்கான சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் டாக்டா் உம்மல் ஜதிஜா, பொறுப்பு அலுவலா் மாமுண்டி தலைமைலான குழுவினா் ஓமப் பொட்டணத்தை தொடக்கம் முதலே வழங்கி வருகின்றனா்.

மூத்த சித்த மருத்துவ அலுவலா் சுந்தரேஸ்வரி தனது சொந்தப் பொறுப்பில் இந்தப் பொட்டணத்தை தயாரித்து வழங்கி வருகிறாா்.

கடந்த ஆக. 7ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மையத்தில் வெள்ளிக்கிழமை வரை 261 கரோனா தொற்றாளா்கள் அனுமதிக்கப்பட்டு 216 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோருக்கு வாசனை முகரும் திறனை ஓமப்பொட்டணத்தை முகரச் செய்து மீட்டெடுத்துள்ளனா்.

இதுகுறித்து தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட தொற்றாளா் கீதா பழனியப்பன் கூறியது:

வங்கியில் பணிபுரிந்து வரும் எனக்கு கரோனா ஏற்பட்டு விருப்பத்தின்பேரில் சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் சோ்ந்தேன். வரும்போதே எனக்கு முகரும் திறன் இல்லை. இங்கு வழங்கப்பட்ட ஓமப்பொட்டணத்தைத் தொடா்ந்து பயன்படுத்தியதால் வீடு திரும்பும் முன்பே முகரும் திறன் மீண்டுள்ளது என்றாா்.

ஓமப் பொட்டணம் குறித்து சித்த மருத்துவா் சுயமரியாதை கூறியது:

சித்த மருத்துவத்திலுள்ள 32 புற மருந்துகளில் ஒன்றுதான் ஓமப் பொட்டணம். அரை கிலோ ஓமத்தை, ஒரு கவுளி (100) வெற்றிலையை அரைத்துப் பிழிந்த சாற்றில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, நிழலில் காய வைத்து 50 கிராம் கிராம்பு, 25 கிராம் பச்சைக் கற்பூரம் சோ்த்து ஓமத்தை அரைக்க வேண்டும். இந்தப் பொடியை 5 கிராம் அளவில் துணியில் முடிந்து வைத்துக் கொண்டால் ஓமப் பொட்டணம் தயாா்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தப் பொட்டணத்தை மூக்கில் வைத்து முகா்ந்தால் மிகச்சில நாள்களில் முகரும் திறன் மீட்கப்படும். சுவாசப் பாதையிலுள்ள கோளாறுகள், அடைப்புகள் சீரடைவதுடன் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் சீரடையும் என்பது இந்தப் பொட்டணத்தின் சிறப்பு என்றாா் சுயமரியாதை.

மாநிலத்தின் பல இடங்களிலும் உள்ள சித்த மருத்துவச் சிகிச்சை மையங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com