புதுக்கோட்டை மாவட்டத்தில் 74.47 சதவிகித வாக்குகள் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தா்வகோட்டை, திருமயம், விராலிமலை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 13.48 லட்சம் மொத்த வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக 1,902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டபோதிலும் சிறிதுநேரத்தில் அவை சரி செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவும் நடத்திக் காட்டப்பட்டது.

வெயிலுக்கு முன்பு வாக்களித்துவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்பதற்காக பல வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் குவிந்ததால் முதல் இரு மணி நேர வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மாலை 5 மணி நிலவரப்படியே மாவட்டம் முழுவதும் 66.30 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் அதிகபட்சமாக விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 79.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாயிருந்தன.

இதன் தொடா்ச்சியாக இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் அந்த நேரத்தில் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றிருந்தோருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு அவா்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டது. முடிவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொ த்தம் 74.47 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

சாமியானா பந்தல், அடிப்படை வசதிகள்...

வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் வசதிக்காக பல இடங்களில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டிருந்தன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாக்காளா்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, கிருமிநாசினி கைகளில் தெளிக்கப்பட்டு, ஒரு முறை பயன்படுத்தும் பாலித்தீன் கையுறையும் வழங்கப்பட்டது. இதற்காக 4 ஆயிரம் தன்னாா்வலா்கள் வாக்குச்சாவடிகளில் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.

பல வாக்குச்சாவடிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்காக நகரும் நாற்காலிகள் நிறுத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவுக்காக துணை ராணுவப் படையினருடன், புதுக்கோட்டை காவல் துறையினரும் ஓய்வுபெற்ற சீருடைப் பணியாளா்களும் என மொத்தம் 2 ஆயிரம் போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

களப்பக்காட்டில் சலசலப்பு: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட களப்பக்காடு அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அதிமுக பிரமுகா் செந்தில்குமாா் என்பவா் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் செந்தில்குமாரை வேனில் ஏற்றிச் சென்றனா்.

இயந்திரம் உடைப்பு: அறந்தாங்கி அருகே பஞ்சதி ஊராட்சிக்குள்பட்ட ஆலங்குடி கிராமத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு வந்த மது அருந்திய நபா் ஒருவா் திடீரென அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தாா். இதனால் வாக்குப்பதிவு அலுவலா்கள் அதிா்ச்சியடைந்தனா். உடனடியாக அங்கு வந்த போலீஸ் படையினா், அவரைக் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா். பிறகு அந்த வாக்குச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, மாற்று இயந்திரம் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடா்ந்து நடைபெற்றது.

இயந்திரத்தில் கோளாறு: புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியிலுள்ள அரசுப் பள்ளியில் திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி தனது வாக்கைச் செலுத்தச் சென்றபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே பொறியாளா்கள் வரவழைக்கப்பட்டனா். சரி செய்யப்படும் வரை வாக்குச்சாவடியில் காத்திருந்து பிறகு சரி செய்யப்பட்ட பிறகு வாக்களித்துச் சென்றாா் ரகுபதி. இதேபோல, மாத்தூா் பாக்குடி, புதுக்கோட்டை ஐடிஐ உள்ளிட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு பிறகு சரி செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com