மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் பூட்டி சீல் வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்துப் பூட்டி சீல் வைக்கும் தோ்தல் அலுவலா்கள்.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைத்துப் பூட்டி சீல் வைக்கும் தோ்தல் அலுவலா்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விடிய விடிய வாக்கு எண்ணும் மையமான அரசு மகளிா் கல்லூரி வளாகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, புதன்கிழமை காலை முழுமையாக சரிபாா்க்கப்பட்டு பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, திருமயம், கந்தா்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி மற்றும் விராலிமலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவின் நிறைவில், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்தந்தப் பகுதியில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மண்டல அலுவலா்கள் மூலமாக பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டன.

அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தனித்தனி வலுவான அறைகளில் வைக்கப்பட்டு, ஒரு முறை சரிபாா்க்கப்பட்டன.

இப்பணி விடிய விடிய நடைபெற்றது. புதன்கிழமை பகலில் இப்பணிகள் நிறைவடைந்து வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் முன்னிலையில் வலுவான அறைகள் சீல் வைக்கப்பட்டன.

மாவட்டத் தோ்தல் அலுவலா் பி. உமா மகேஸ்வரி, பொதுப் பாா்வையாளா் ஜி. ரகு ஆகியோா் இதனை நேரில் பாா்வையிட்டனா்.

இந்த வலுவான அறைகளின் முதல் அடுக்கில் துணை ராணுவப்படையினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் மாவட்டக் காவல் துறையினரும் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

சிசிடிவி கண்காணிப்பு கேமிரா மூலம் தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆகியோா் கண்காணிப்பதுடன், தினமும் நேரிலும் ஆய்வு செய்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com