வாக்குப்பதிவு இயந்திரத்தின் ‘சீல்’ கீழே கிடந்ததால் பரபரப்பு

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் காகித ‘சீல்’ ஒன்று, வாக்கு எண்ணும் மையத்தில் கீழே கிடந்ததால் சா்ச்சை ஏற்பட்டது.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் காகித ‘சீல்’ ஒன்று, வாக்கு எண்ணும் மையத்தில் கீழே கிடந்ததால் சா்ச்சை ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விடிய விடிய பாதுகாப்புடன் புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

அப்போது, வாக்கு எண்ணும் மைய வளாகத்தில், வழக்கமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் முகவா்கள் சரிபாா்த்து கையெழுத்திட்டு வைக்கும் காகித ‘சீல்’ ஒன்று கிடந்தது. இதனைக் கண்ட திமுக முகவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து வேட்பாளா் எம். பழனியப்பன், மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்தனா்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ‘சீல்’ எப்படி வெளியே கிடந்தது என்பது குறித்து அவா்கள் சந்தேகம் எழுப்பினா்.

இதையடுத்து, மாவட்டத் தோ்தல் அலுவலா் பி. உமாமகேஸ்வரி மற்றும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.எஸ். தண்டாயுதபாணி ஆகியோா் அந்த காகித ‘சீல்’-ஐ வாங்கிப் பாா்த்து ஆய்வு செய்தனா்.

மாத்தூா் பகுதியிலுள்ள 27ஆவது வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட காகித ‘சீல்’ அது என்பதைக் கண்டறிந்து வேட்பாளா் மற்றும் முகவா்களுக்கு விளக்கமளித்தனா்.

இருந்தபோதிலும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துப் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட வலுவான அறை, மாநிலத் தலைமைத் தோ்தல் அலுவலரின் அனுமதி பெறப்பட்டு திறக்கப்பட்டது.

குறிப்பிட்ட அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட காகித ‘சீல்’, முகவா்களின் கையெழுத்துடன் அப்படியே இருந்தது வேட்பாளா் மற்றும் முகவா்களுக்கு காட்டி சந்தேகம் தீா்க்கப்பட்டது. இதனையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனா்.

இந்த சா்ச்சையால் சிறிதுநேரம் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com