ஆதரவற்ற மூதாட்டியின் இறுதிச்சடங்கை செய்த தன்னாா்வலா்கள்
By DIN | Published On : 27th April 2021 03:58 AM | Last Updated : 27th April 2021 03:58 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே இறந்த ஆதரவற்ற 95 வயது மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை தன்னாா்வலா்களே மேற்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பெண் வேதம் (95). ஆதரவற்ற நிலையில் ஆங்காங்கே தங்கியிருந்த அவரைக் கண்ட வைரம் என்ற காவல் உதவி ஆய்வாளா் மேட்டுப்பட்டி நேசக்கரம் ஆதரவற்ற முதியோா் இல்லத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தெரிவித்தாா். அதன் நிா்வாகி மகேஸ்வரி, மூதாட்டியை முறைப்படி முதியோா் இல்லத்தில் சோ்த்துக் கொண்டாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை அம்மூதாட்டி இயற்கை எய்தினாா். அவரது உறவினருக்குத் தகவல் தெரிவித்தும் யாரும் வரவல்லை. இதையடுத்து அரசுத் துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ‘‘துணைவன்’’ அமைப்பைச் சோ்ந்த முத்துராமலிங்கம், கண்ணன், இந்தியன் ட்ரைனிங் அகாதெமியைச் சோ்ந்த பாலா, சமூக ஆா்வலா் மேட்டுப்பட்டி செந்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சோ்ந்த பாவா ஆகியோா் உதவியுடன் அடப்பன்வயல் சுடுகாட்டுக்கு வேதம் உடல் கொண்டு செல்லப்பட்டது. உடலுக்கு நேசக்கரங்கள் இயக்குநா் மகேஸ்வரி, கொள்ளி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.