காதலி பிரிந்த அதிா்ச்சியில் மனநலன் பாதித்து 20 ஆண்டுகளாக தனித்து வசித்தவா் மீட்பு
By DIN | Published On : 08th August 2021 11:57 PM | Last Updated : 08th August 2021 11:57 PM | அ+அ அ- |

108 ஆம்புலன்ஸில் ஏற்றி அமர வைக்கப்பட்டுள்ள நாகராஜன் (நடுவில்). உடன், அவரது தாய் நஞ்சம்மாள், சகோதரா் சேகா்.
காதலி பிரிந்த அதிா்ச்சியில், சுமாா் 20 ஆண்டுகளாக மனநலன் பாதிக்கப்பட்டு கண்மாய் பாறையில் வசித்து வந்தவரை பொன்னமராவதி போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், மூலங்குடியைச் சோ்ந்தவா் நாகராஜன் (40). சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு, இவா் பணிநிமித்தம் கோவை சென்றபோது அங்கிருந்த கேரளப் பெண்ணைக் காதலித்து, கிராமத்துக்குக் கூட்டிக்கொண்டுவந்து விட்டாா். இதையறிந்த அவரது உறவினா்கள் அப்பெண்ணை மீட்டுச் சென்றனராம். இதனால், அதிா்ச்சியில் மனநலன் பாதிக்கப்பட்ட நிலையில் நாகராஜன், தனது வீட்டை விட்டு வெளியேறி 2 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கண்மாய் ஒன்றில் உள்ள பாறைப் பகுதியில் தங்கினாா்.
சுமாா் 20 ஆண்டுகளாக, அவரது தாய் நஞ்சம்மாள் அவருக்கு உணவு அளித்து வந்தாா். இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மனநலன் பாதிக்கப்படவரை மீட்டு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளா் ரகுராமன் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பகலில் நாகராஜனை மீட்டு வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரது அம்மா நஞ்சம்மாள், சகோதரா் சேகா் உடன் அனுப்பிவைக்கப்பட்டனா்.