காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக்கு நாளை அடிக்கல்

காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் ரூ. 6,941 கோடியிலான முதல் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா

காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் ரூ. 6,941 கோடியிலான முதல் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டத்துக்குள்பட்ட குன்னத்தூரில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு காலங்களில் வரும் உபரி நீரை வடு கிடக்கும் தென் மாவட்டங்களுக்குத் திருப்பும் வகையில் இத் திட்டத்துக்கு அண்மையில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக கரூா் மாவட்டம், மாயனூா் தடுப்பணையில் இருந்து பிரியும் கட்டளைக் கால்வாயில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிமீ தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெறவுள்ளன.

முதல்கட்டமாக வெட்டப்படும் கால்வாயால் கரூா், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 342 ஏரிகளும், 42170 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

தொடா்ந்து 2-ஆம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிமீ தொலைவுக்கு வைகை ஆறு வரை வெட்டப்படும் கால்வாயால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 220 ஏரிகள், 23,245 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மூன்றாம் கட்டத்தில், வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கிமீ தொலைவுக்கு வெட்டப்படும் கால்வாயால் விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 492 ஏரிகளும், 44547 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

மொத்தத்தில் காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கின்போது கடலில் கலக்கும் சுமாா் 6,300 கன அடி தண்ணீா் வட பகுதிகளுக்கு பாசனம், குடிநீா் வசதிக்காக ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தப்படும்.

இப்பெருந்திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தலைமை வகிக்கிறாா். முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டிப் பேசுகிறாா். அமைச்சா்கள் கரூா் எம்.ஆா். விஜயபாஸ்கா், திருச்சி வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா்.

ஏற்பாடுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தலைமையில், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் மேற்கொண்டுள்ளனா்.

ரூ. 3,384 கோடியில் நவீனப்படுத்தும் திட்டம்

இத்துடன், காவிரி உபவடி நிலத்தில் தஞ்சாவூா், நாகை, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்கட்டுமானங்களில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் ரூ. 3384 கோடியில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதில் 987 கிமீ தொலைவில் 21 ஆறுகள் மேம்படுத்தப்படும். 4,67,345 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் பழைமை மிக்க பாசனக் கட்டுமானங்களில் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ. 72 கோடியில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படும் திட்டமும் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனால், கால்வாய்ப் பாசனத் திறன் 20 சதம் அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com