வேளாண் மக்களின் நலன் காக்கும் வகையில் அதிமுக அரசு செயல்படுகிறது: முதல்வர்

வேளாண் மக்களின் நலன் காக்கும் அரசாக, துயர் நீக்கும் அரசாக அதிமுக அரசு செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
வேளாண் மக்களின் நலன் காக்கும் வகையில் அதிமுக அரசு செயல்படுகிறது: முதல்வர்

வேளாண் மக்களின் நலன் காக்கும் அரசாக, துயர் நீக்கும் அரசாக அதிமுக அரசு செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெற்ற காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்த அவர் பேசியது: இந்த நாள் என் வாழ்வின் பொன்நாள். பிறந்த பயனை அடைந்துவிட்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என எண்ணிய திட்டம் இந்தத் திட்டம். பல பேர் இத்திட்டம் நிறைவேறுமா என சந்தேகத்துடன் இருந்தார்கள். கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் விவசாயிகளுக்குப் பயன்தரும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் பேர் விவசாயிகள். அத்தனைப் பேருக்கும் நீர் தான் இன்றியமையாத தேவை. நம் மாநிலம் நீர் பற்றாக்குறையுள்ள மாநிலம். கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகுதான் மேட்டூர் நிரம்பும். அதற்காகத்தான் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத அளவுக்கு நீர் மேலாண்மைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை மத்திய அரசே பாராட்டும் அளவுக்கு செயல்படுத்தி வருகிறோம். ரூ.1,417 கோடியில் குடிமராமத்துத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் அந்தந்த பகுதி சிறு குளங்களும் தூர்வாரப்பட்டிருக்கின்றன.

மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு முதல் முறையாக நாங்கள்தான் தூர் வாரினோம். தமிழக அரசின் 'நடந்தாய் வாழி காவிரி திட்டம்' குடியரசுத் தலைவரின் உரையிலேயே இடம்பெற்றிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து என்ன பெற்றிருக்கிறீர்கள்? என ஸ்டாலின் கேட்டுக் கொண்டே இருக்கிறார். இவையெல்லாம் நேரடி சாட்சி. யாராலும் மறைக்க முடியாது. நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுநீரை நேரடியாக காவிரியில் கலப்பதைத் தடுத்து சுத்திகரித்து வெளிவிடும் திட்டம் 'நடந்தாய் வாழி காவிரி'. மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நிறைவேற்றும் அரசாக செயல்படுகிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்தத் திட்டங்களையெல்லாம் நாங்களே திறந்து வைப்போம்.

இப்படியொரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என 6 நாட்களுக்கு முன்புதான் விஜயபாஸ்கரிடம் உறுதியளித்தோம். இப்போது இத்தனை பிரம்மாண்டமாக நிகழ்ச்சியை நடத்திக்காட்டியிருக்கிறார் அவர். புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. பணிகள் முடிவுற்றவுடன் நானே திறந்து வைத்தேன். இப்போது பல் மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டைக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் இங்கு தொடங்கப்பட்டது. ஏழை. எளிய மக்களுக்காக 2 ஆயிரம் வீடுகள் தயாராகி வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக் திட்டத்தில் 74 மினி கிளினிக்குகள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது திமுக அரசு. அந்தத் திட்டத்தைச் செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது அதிமுக அரசு. ஆனால் இப்போது எங்கள் அரசு மீது பல அவதூறு பிரசாரங்களை செல்லும் இடங்களில் எல்லாம் மேற்கொள்கிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களாக அவரால் எதையும் கூற முடியவில்லை.

வேளாண் மக்களின் நலன் காக்கும் அரசாக, துயர் துடைக்கும் அரசாக எங்கள் அரசு செயல்படுகிறது என்றார் எடப்பாடி கே. பழனிசாமி. விழாவுக்கு தமிழக அரசின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்து பொக்லைன் இயந்திரங்களின் பணிகளைத் தொடங்கி வைத்தார். அயோத்திக்கு அண்மையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியபோது நடத்தப்பட்ட நிகழ்ச்சியைப்போல அடிக்கல் நாட்டுவதற்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் இதுவரை இதுபோன்ற அடிக்கல் நாட்டு விழா நடைபெறவில்லை. ஏறத்தாழ யாகசாலை பூஜைபோல அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி. விஜயபாஸ்கர், கே.டி. ராஜேந்திரபாலாஜி, ஓ.எஸ். மணியன், திருச்சி வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளின் ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இத்துடன், காவிரி உபவடிநிலத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்கட்டுமானங்களில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் ரூ. 3384 கோடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 987 கிமீ தொலைவில் 21 ஆறுகள் மேம்படுத்தப்படும். 4,67,345 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் பழைமை மிக்க பாசனக் கட்டுமானங்களில் ஸ்காடா தொழில்நுட்பம் மூலம் ரூ. 72 கோடியில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படும் திட்டமும் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதனால், கால்வாய்ப் பாசனத் திறன் 20 சதவிகிதம் அதிகரிக்கும். விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்துக்கு காவிரிக் குடிநீர் தந்த அதிமுக அரசு தற்போது வேளாண் வளர்ச்சிக்காக காவிரியையே தந்திருக்கிறோம். முதலில் இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் அறிவித்தார். அதன்பிறகு சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து உடனே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. தொடர்ச்சியாக ரூ. 700 கோடி முதல் கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர் மேலாண்மைக்காக திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் எடப்பாடி கே. பழனிசாமியும் தற்போது இணைந்திருக்கிறார் என்றார் விஜயபாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com