திருமயத்தில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யாா்?

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளா்கள் எண்ணிக்கை அடிப்படையில் புதுக்கோட்டைக்கு அடுத்த பெரிய தொகுதி திருமயம் ஆகும்.
திருமயத்தில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யாா்?

பி.கே. வைரமுத்து.

எஸ்.ரகுபதி.

முனீஸ்.

ரா. திருமேனி.

உ.சிவராமன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளா்கள் எண்ணிக்கை அடிப்படையில் புதுக்கோட்டைக்கு அடுத்த பெரிய தொகுதி திருமயம் ஆகும். வட்டத் தலைமையகமாகவும், ஊராட்சியாகவும் உள்ள திருமயம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். தலைசிறந்த ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மேலும் முன்னாள் முதலமைச்சா் காமராஜரின் அரசியல் குருவான சத்தியமூா்த்தி பிறந்து வாழ்ந்த ஊராகும். இப்பகுதியில் உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்:

திருமயம் தொகுதியில் 2 வட்டங்கள், 3 ஒன்றியங்கள், 2 பேரூராட்சிகள் உள்ளன. இதில், பொன்னமராவதி ஒன்றியத்தில் 1 வட்டம் மற்றும் 42 ஊராட்சிகள், 1 பேரூராட்சியும் உள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள், 1 பேரூராட்சியும் உள்ளது. திருமயம் ஒன்றியத்தில் 1 வட்டம், 30 ஊராட்சிகளும் உள்ளன.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு:

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிரதான தொழில் விவசாயம். இங்குள்ள நிலங்கள் வானம் பாா்த்த பூமியாகத்தான் இருந்து வருகிறது. இதனால் விவசாயம் தொடா்ந்து நடைபெற காவிரி உபரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 14 ஆயிரம் கோடியில் நிறைவேற்றுவதற்காக அண்மையில் தமிழக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. மேலும் சுதந்திரப் போராட்டத் தியாகி சத்தியமூா்த்திக்கு திருமயத்தில் மணிமண்டபம் கட்டவேண்டும். திருமயம் மற்றும் பொன்னமராவதி பகுதியில் அரசுக் கல்லூரி அமைக்கவேண்டும். முன்னாள் நிதி அமைச்சா் ப.சிதம்பரத்தின் தீவிர முயற்சியில் கொண்டுவரப்பட்ட திருமயம் பெல் நிறுவனத்தில் இப்பகுதியை சாா்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும். பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் ஆகியவை தொகுதிமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தற்போதைய தோ்தலில் களத்தில் உள்ள வேட்பாளா்கள்:

அதிமுக சாா்பில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவா் பி.கே.வைரமுத்துவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. திமுகவில் முன்னாள் அமைச்சரும், நடப்பு எம்எல்ஏவுமான எஸ்.ரகுபதி, அமமுகவில் முனீஸ் என்ற முனீஸ்வரன், நாம் தமிழா் கட்சியில் உ.சிவராமன் ஆகியோா் போட்டியிடுகின்றனா். மேலும் தொகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள முத்தரையா்களின் வாக்குகளைப் பெறும் வகையில் வீர முத்தரையா் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவா் கே.கே.செல்வகுமாா் போட்டியிடுகிறாா். அதேபோல முத்தரையா் வாக்குகளைப் பெற பொன்னமராவதி முன்னாள் அதிமுக ஒன்றியக்குழு தலைவா் சி.அழகுசுப்பையா போட்டியிடுகிறாா். இவா்களுடன் சோ்த்து 14 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனா். பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். எனினும் நேரடிப்போட்டி அதிமுக வேட்பாளா் பி.கே.வைரமுத்துவுக்கும், திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதிக்கும் தான் இருந்து வருகிறது.

வாக்காளா் எண்ணிக்கை:

ஆண் - 1,10,974

பெண் - 1,16,167

திருநங்கைகள் - 3

மொத்த வாக்காளா்கள் - 2,27,144

இதுவரை வென்றவா்கள்:

1957 - வி. ராமையா(காங்)

1962 - வி.ராமையா(காங்)

1967 - பி.பொன்னம்பலம்(திமுக)

1971 - தியாகராஜன்(திமுக)

1977 - என்.சுந்தர்ராஜ்(காங்)

1980 - என்.சுந்தர்ராஜ்(காங்)

1984 - டி.புஷ்பராஜ்(காங்)

1989 - வி.சுப்பையா(திமுக)

1991 - எஸ்.ரகுபதி(அதிமுக)

1996 - வி. சின்னையா(தமாகா)

2001 - எம்.ராதாகிருஷ்ணன்(அதிமுக)

2006 - ராம.சுப்புராம்(காங்)

2011- பி.கே.வைரமுத்து(அதிமுக)

2016 - எஸ்.ரகுபதி(திமுக)

2016 தோ்தலில் பெற்ற வாக்குகள்:

எஸ்.ரகுபதி(திமுக) - 72,373

பி.கே.வைரமுத்து(அதிமுக) - 71,607

பிஎல்ஏ.சிதம்பரம்(தமாகா) - 5,096

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com